[X] Close

ஆட்சியமைக்குமா பாஜக கூட்டணி? - கிங்மேக்கர் ஆவார்களா மாநிலத் தலைவர்கள்?

Subscribe
Lok-Sabha-polls--These-Kingmakers-could-decide-who-forms-the-new-government

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானப் பிறகு ஆட்சியமைக்க கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்கிற சூழல் ஏற்பட்டால், ஆதரவு கரம் நீட்டுமளவுக்கு செல்வாக்குள்ள தலைவர்களாக யார் இருப்பார்கள் என்பதுதான் இப்போதைக்கு எழும் பெரிய கேள்வி.


Advertisement

மக்களவைத் தேர்தலில் பாஜக அணி பெரும்பான்மை பெறும் எனத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால் தேர்தல் முடிவுகள் கணிப்புகளுக்கு மாறாக இருந்தால் பாரதிய ஜனதாவுக்கு ஆட்சியமைக்க கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அப்படி ஒரு சூழல் ஏற்படும் போது மாநில கட்சித் தலைவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள்.

        


Advertisement

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 27 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும் எனத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை தீர்மானிக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என வெளிப்படையாக கூறியுள்ள ஸ்டாலின் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

       

கடந்த மக்களவைத் தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்ற பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் இம்முறையும் பிரதமரை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றக் கூடும். இம்முறை ஒடிஷாவில் 21 மக்களவைத் தொகுதிகளில் பிஜூ ஜனதா தளத்திற்கு 2 இடங்கள் முதல் 15 இடங்கள் வரை கிடைக்கக் கூடும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்குடன் சுமூக உறவை பேணி வருகிறார். ஃபோனி புயலின்போது நவீன் பட்நாயக்கின் செயல்பாட்டையும் அவர் பாராட்டியிருந்தார்.


Advertisement

         

தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் மாநில கட்சிகளின் அணியை அமைக்க தீவிரம் காட்டி வருகிறார். எனினும் முடிவுகள் சாதகமற்று இருக்கும் பட்சத்தில் அவர் பாரதிய ஜனதாவுக்கே ஆதரவளிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சந்திரசேகர் ராவின் கட்சி கடந்த தேர்தலில் தெலங்கானாவின் 17 தொகுதிகளில் 10 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை அந்தக் கட்சி 13 இடங்கள் வரை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

          

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை விட ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் அவரது ஆதரவைப் பெற பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி 20 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

                                

மத்தியில் பாரதிய ஜனதா அல்லாத ஒரு அரசு அமைந்தால் அதை தீர்மானிக்கும் முக்கியத் தலைவர்களில் ஒருவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி இருக்கக்கூடும். 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காளத்தில் இம்முறை மம்தா பானர்ஜியின் கட்சி 24 முதல் 29 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறக்கூடும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 

                   
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசை தீர்மானிக்கும் முக்கியத் தலைவர்களில் ஒருவாக இருக்கக்கூடும். 

பகுஜன் சமாஜ் -சமாஜ்வாதி கூட்டணிக்கு 20 முதல் 45 இடங்களே கிடைக்கும் எனத் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் தெரிவிக்கின்றன. மாயாவதியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அகிலேஷ் யாதவ் பாரதிய ஜனதாவுக்கு எதிரான  கூட்டணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் மாயாவதியை பொறுத்தவரை தேர்தல் முடிவுகளை பார்த்த பின்பே  தனது நகர்வை தீர்மனிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் கூறியுள்ள‌ன.

                  

பாரதிய ஜனதா கூட்டணி பெரும்பான்மையை பெற்று அரசமைக்குமா அல்லது மாநிலக் கட்சித் தலைவர்கள் அடுத்த அரசை முடிவு செய்வார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close