பொதுத்தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? மாணவர்களும் பெற்றோர்களும் கவனிக்க வேண்டியவை!

Jayashree A

பொதுத்தேர்வுக்கான காலம் நெருங்கிவிட்டது... சிபிஎஸ்இ, மாநில பாடத்திட்டம் பயிலும் மாணவர்கள் அனைவரும் மும்முரமாக தேர்வுக்கு தயாராகி வரும் இந்தச் சூழலில், தேர்வு எழுதப்போகும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கவனிக்க வேண்டியவை என்னென்ன? இங்கே பார்ப்போம்...

தேர்வு எழுதப்போகும் முன் மாணவர்கள் தேர்வு பதற்றத்தில் இருப்பார்கள். ஆகவே பெற்றோர்கள் அவர்களிடம் ஆறுதலாக பேசி அவர்களின் பதற்றத்தை தணித்து வழி அனுப்பி வையுங்கள்.

பெற்றோர்கள் தேர்வு முடிந்து குழந்தை வீடுதிரும்பியவுடன் ‘தேர்வு எப்படி இருந்தது’ என்று கேட்காதீர்கள். நன்றாக எழுதி இருந்தால் அவர்களே சொல்வார்கள். இல்லாதபட்சத்திலும், அதுசார்ந்து அதிகம் பேசி அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கவேண்டாம்.

பெற்றோர்கள், தேர்வுக்கு முதல் நாள் புதிதாக படிக்க குழந்தைகளை அதிகம் வற்புறுத்தாதீர்கள். இதுவரை படித்ததை அவர்கள் நினைவுப்படுத்திக் கொண்டால் போதுமானது

ஹால்டிக்கெட், பேனா, பென்சில்களை சரியாக எடுத்து வைத்துக்கொண்டீர்களா என்பதை மாணவர்கள் சுயமாக சரிபார்த்துகொள்ளுங்கள். கூடுதலாக ஒரு பேனா கொண்டு செல்வது இன்னும் நல்லது.

மாணவர்களுக்கு காலை உணவு கண்டிப்பாக அவசியம். அதனால் ஏதாவது சாப்பிட்டுவிட்டு பரிட்சைக்கு புறப்படுங்கள்.

கோடை காலம் நெருங்குவதால், தேர்வு முடித்து வரும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஜூஸ் போன்ற ஆகாரங்களை கொடுத்து அவர்களை ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்வது நல்லது.

பெற்றோர்கள் தேர்வு சரியாக எழுதாத தங்கள் பிள்ளைகளுக்கு ஆறுதல் வார்த்தை கூறி அடுத்த தேர்வை நன்றாக எழுத உத்வேகம் கொடுங்கள்

தேர்வு மதிப்பெண் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம்தான்; ஆகையால் குறைவான மதிப்பெண் பெற்றாலும் நம்பிக்கையை தளரவிடாதீர்கள்.

சாதிப்பதற்கும் மதிப்பெண் குறைவதற்கும் சம்பந்தமில்லை. ஆகவே தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியர் மனம் தளராமல் தேர்வை எதிர்நோக்குங்கள்

தேர்வுக்கு முதல் நாள் இரவு, தூக்கம் அவசியம். அதனால் போதிய நேரம் தூங்கி எழுந்து உற்சாகமாக பரிட்சைக்கு செல்லுங்கள் மாணவர்களே...

இறுதியாக, தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும்... ALL THE BEST!