ROTTWEILER
ROTTWEILERpt web

மனிதர்களை தாக்கும் அபாயம்.. இந்தியாவில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்களுக்குத் தடை!

இந்தியாவில் ராட்வைலர் மட்டுமின்றி 23 வகையான நாய் இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த நாய் இனங்களுக்கு தடை பெறப்பட்டுள்ளது என்று விரிவாக பார்க்கலாம்.
Published on

நாய்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, இந்தியாவில் PITBULL, ROTTWEILER, TERRIER, MASTIFFS, AMERICAN BULLDOG, SOUTH RUSSIAN SHEPHERD DOG உள்ளிட்ட 23 வகையான நாய்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த வகை நாய்கள் மனிதர்களை தாக்குவதால் மட்டுமின்றி, இறப்பையும் ஏற்படுத்துவதால் கடந்த மார்ச் 12 ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய விலங்குகள் நலத்துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதிய கடிதத்தில், தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கவோ, விற்கவோ உரிமம் தரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் வளர்க்கப்படும் இந்த நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாய்கள் மற்றும் மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பீட்டா இந்தியா அமைப்பு ரிட் மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையான குழு அமைக்கப்படாததால் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் இந்த உத்தரவுக்கு தடை பெறப்பட்டுள்ளது.

இனி ராட் வைலர் நாய்கள் பற்றி விரிவாக பார்ப்போம். இந்த இன நாய்கள் ஜெர்மனியில் இருந்து வந்தவை. ஜெர்மனியின் ராட் வைல் பகுதியை, இவை தாயகமாக கொண்டதால் அந்த பேரிலேயே அழைக்கப்படுகின்றன. 9 முதல் 12 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இந்த இன நாய்கள், பொதுவாக காவல் பணிக்காக பயன்படுத்தப்படுபவை. இந்த வகை நாய்களை சரியாக பழக்கினால், காவல் பணியோடு, வழிகாட்டுதல், மாடுகள் மேய்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வைக்க முடியும். உரிமையாளர் என ஏற்கும் நபரின் கட்டளைகளை மட்டுமே ராட் வைலர் ஏற்கும். வேறு யார் கட்டளைகள் அளித்தாலும் ராட் வைலர்கள் ஏற்காது. தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு வகைகள், தடுப்பூசிகள், பயிற்சி, மனநல பயிற்சிகள் தேவைப்படும் இந்த வகை நாய்கள், சரியாக பராமரித்து வளர்க்கப்படாவிட்டால் மிகவும் ஆக்ரோஷமாக மாறக்கூடியவை.

ராட் வைலர் போன்ற வெளிநாட்டு நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து வேட்டைத்தன்மை கொண்ட இந்த இனம் உள்ளிட்ட 23 நாய் இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது வளர்க்கப்படும் நாய்களும் உரிமம் இல்லாமல் வளர்க்கப்படக்கூடாது எனக் கட்டுப்பாடுகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com