[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வைரலான வைரமுத்து பேச்சும்.. பாஜகவின் கண்டனங்களும்..!

vairamuthu-article-about-andal-bjp-leaders-condemned-vairamuthu

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சு பல்வேறு சர்ச்சைகளையும், பாஜகவினரின் எதிர்ப்புக்களையும் பெற்றுள்ளது.

கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் “ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.” என்று ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார்.

அத்துடன் இந்தக் தகவலை, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல் ஒன்றில் ஆண்டாள் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்பு என்றும் கூறியுள்ளார். இந்தக் கருத்துக்களை திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் வைரமுத்து குறிப்பிட்டு கூறியிருந்தார். 

வைரமுத்துவின் இந்த கருத்துக்கு, மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் ஆண்டாளை தவறாக பேசியுள்ள வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பெரும் எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஹெச்.ராஜா, வைரமுத்து பேசியது விஷமத்தனமானது. இந்துக்களின் மத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்துவது என்பது வைரமுத்து போன்றவர்களுக்கு வாடிக்கை என்றும் சாடியிருந்தார்.  

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், லட்சக் கணக்கான மக்களால் தெய்வத்துக்குச் சமமாகப் போற்றப்படும் ஆண்டாள் நாச்சியார் குறித்து புனிதமான மார்கழியில், புனிதமான ஆலய வளாகத்தில் அவரது புனிதத்தைக் கெடுக்கும் வகையில் தவறான தகவலை எவர் பேசினாலும், எழுதினாலும் கண்டிக்கத் தக்கது என்று கூறியிருந்தார்.  

இவ்வாறு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வந்துசேர, ட்விட்டர் பதிவில் வந்து சேர்ந்தது வைரமுத்துவின் வருத்தங்கள். “புண்படுத்துவது என் நோக்கமன்று. தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். 

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்” என கூறியிருந்தார். 

இதற்கு வருத்தம் தெரிவித்தால் போதாது கட்டுரையையே மாற்றி எழுதுங்கள் என்று வலியுறுத்தி பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பதில் பதிவை எழுதினார். அதில், “கவிஞர் வைரமுத்து ஆண்டாளைப் பெருமைப்படுத்துகிறேன் என்று பேசவும் எழுதவும் ஆரம்பித்து சிறுமைப் படுத்தியிருக்கிறார். தேவதாயாக பெண் ஆழ்வாராக பெருமை சேர்த்தவரை தேவதாசியாக சித்தரிக்க எப்படி மனம் வந்தது? பணம் வந்தது என்று பல வரிகளை தமிழை சிதைத்து பாடல் எழுதிய கவிஞர் இன்று வரலாற்றை சிதைத்து எழுந்திருப்பது வருந்தத்தக்கது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனைவரின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. ஆனால் அந்த வருத்தமும் மன்னிப்பும் கேட்பதில் கூட தயக்கம் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நான் மேற்கோள் தானே காட்டினேன் என எழுதிய தப்பிற்கு வருந்தாமல் தப்பிக்கும் போக்கே தெரிகிறது. தமிழ் என்பது ஆன்மீகத் தமிழ் அதுவும் அண்ணா வளர்ப்பதற்கு முன்னாலேயே ஆண்டாள் வளர்த்தால், ஆனால் பெரியார் தமிழை வளர்த்தார் என பொய்யாக சொல்பவர் பெரியாழ்வார் வளர்த்தார் நம்ப மறுப்பதும் வைரமுத்துவை இப்படி பேச வைக்கிறது.

தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதியின் வார்த்தையை தமிழ் வளர்த்த ஆண்டாளைப் பழித்தவரை யார் தடுத்தாலும் விடோம் என்பதே எங்களது நிலை. மனது புண்பட்டால் வருந்துகிறேன் என்பது மட்டுமே பண்படாமல் எழுதிய வாசககங்களுக்கு பதில் ஆகாது உடனே கட்டுரையை மாற்றி எழுத்து பூர்வமாக பதிவு செய்வது மட்டுமின்றி இனிமேல் இதுபோன்று உணர்வுகளை காயப்படுத்த மாட்டேன் என உள்ளார்ந்து எழுத்து பூர்வமாகவும், கருத்து பூர்வமாகவும் மன்னிப்பு கேட்க வேண்டும், இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் மறுப்பு ஏதோ வெறுப்பை மனதில் வைத்தே கொடுத்தைப்போல் உள்ளதால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வருத்தத்துடன் வலியுறுத்துகிறேன்” என்று கண்டனங்களை தெரிவித்தார். 

இவ்வாறு வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த கருத்து சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் பல்வேறு வாதங்களையும் எழுப்ப, இது தொடர்பாக புதியதலைமுறையின் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தினமலர் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் மற்றும் திமுகவின் பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். 

வெங்கடேஷ் கூறும் போது, “ஆண்டாள் ஒரு சிறந்த ஆன்மீக வாதி. பக்தியோடு தொழக்கூடியவர். அப்படிப்பட்டவரின் பங்களிப்பை வைரமுத்துவின் கட்டுரை உயர்த்திப்பிடிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இதில் உள்ள பிரச்னை என்ன வென்றால், சில இடங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். ஏனெனில் காலமாற்றத்தில் சில வார்த்தைகளின் பொருள் மாறியுள்ளது. சில வார்த்தைகள்  மேம்பட்டுள்ளது. சிலது தரம் தாழ்ந்துள்ளது. தேவதாசி வார்த்தை தற்போதுள்ள காலத்தில் தரம் தாழ்ந்த சொல்லாகவே பார்க்கப்படுகிறது. இதுதான் சர்ச்சைக்கு காரணமாக உள்ளது. எனவே ஒரு வார்த்தை மக்களிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து எழுத்தாளர் அதை பயன்படுத்த வேண்டும். படிக்கும் வாசகர்களும் எழுத்தாளர் எந்த அர்த்தத்தில் அதை பயன்படுத்தியுள்ளார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் கட்டுரை முழுக்க ஆண்டாளை புகழும் ஒருவர், ஒரு வார்த்தையில் மட்டும் கொச்சைப்படுத்த நினைக்கமாட்டார்” என்றார். 

இவரது கருத்தின் படி வார்த்தை என்பது பயன்படுத்தப்படும் இடம் மற்றும் அதன் பொருட்களின் தன்மையை பொருத்தது என்பதை காட்டுகிறது.  

மனுஷ்யபுத்ரன், “வைரமுத்து கூறியுள்ள அந்த ஒரு வார்த்தைக்கு தான் ஹெச்.ராஜா கொதித்து எழுகிறார் என்றால் தேவதாசி என்ற வார்த்தையை புனிதப்படுத்தியது யார்? கோயில் கலாச்சாரங்களில் அதை வைத்தது யார்? அது இந்து மதத்தின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டிருந்ததா? அல்லது வேறு மதத்தின் ஒரு பகுதியா வைக்கப்பட்டிருந்ததா? இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் அந்த வார்த்தை ஒரு பண்பாட்டின் அடிப்படையில் தான் வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பார்த்தால், யார் அதை புனிதப்படுத்தினார்களோ, அத்தகையவர்களாகிய இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம் என்று கூறியவர்களே இன்று ஏன் அந்த சொல்லை தாழ்ந்த சொல்லாக பார்க்கின்றனர் என்பது தெரியவில்லை. ஹெச்.ராஜா அப்படிப்பார்ப்பதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. அவர்களின் இந்தக் கோபம் ஒரு பச்சையான அரசியல் நாடகம். ஆண்டாள் என்றால் அது பக்தி மட்டும் அல்ல. அது காதல், அன்பு, ஒரு மனநெகிழ்ச்சி. ஆண்டாளை உண்மையாக படித்தவர்கள் எப்படி கட்டுரை எழுதுவார்கள் என்பதற்கு வைரமுத்துவின் கட்டுரை ஒரு சாட்சி. அந்த அளவுக்கு வைரமுத்து ஆண்டாளை உயர்த்தி பேசியுள்ளார்” என்று கூறினார். 

இவ்வாறாக பலதரப்பட்ட கருத்துக்களால் வைரமுத்துவின் ஆண்டாள் விவகாரம் வைரலாக மாறிவருகிறது. ஒரு கட்டுரையில் ஒரு வார்த்தை பார்க்காமல் அதன் நோக்கத்தையும் பார்க்க வேண்டும் என்பதற்கும், நம்மைப் போலவே மற்றவர்களும் ஒரு வார்த்தையின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ளமாட்டார்கள் என்பதையும் வெளிக்காட்டுவதற்கும் இது ஒரு உதாரணம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close