Published : 23,Oct 2019 05:02 PM
காங். மூத்த தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன்

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் கோரி இவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதன்படி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சி செய்யக்கூடாது, வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்யக்கூடாது, வழக்கு விசாரணைக்கு எப்பொழுது அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், 25 லட்ச ரூபாயை பிணைத் தொகையாக கட்ட வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
டி.கே.சிவக்குமாருக்கு எதிரான வழக்கு ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.