Published : 14,May 2017 04:40 PM
ஈவ்-டீசிங்கால் ஒரே ஊரில் 80 மாணவிகள் பள்ளி படிப்பை நிறுத்திய கொடுமை

ஹரியானாவில் உள்ள கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த 80 மாணவிகள் ஈவ்-டீசிங் கொடுமையால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி கடந்த புதன் கிழமையில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்கும் 11, 12 ஆம் வகுப்பும் படிக்கும் மாணவிகள் மூன்று கிலோ மீட்டர் சென்று கான்வாலியில் நாங்கள் படிக்க வேண்டியது உள்ளது. நாங்கள் செல்லும் போது ஈவ்-டீசிங் தொல்லைக்கு ஆளாக வேண்டியதால் பயமாக உள்ளது என்று கூறினர்.
இது தொடர்பாக உள்ளூர் தலைவரிடம் மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதனை அவர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார், புகாரால் எந்த பயனும் இல்லை. இதனையடுத்து மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். உண்ணாவிரதத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
மாணவிகள் பள்ளி செல்லும் வேலையில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வரும் ஆண்கள் அவர்களிடம் தவறாக நடந்துக் கொள்கிறார்கள், இதனால் மாணவிகள் அச்சம் கொண்டுள்ளனர் என்று ஊர் தலைவர் சுரேஷ் சவுகான் கூறினார்.
பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் சேர்க்கையே உள்ளது, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பல விதிமுறைகள் உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதே ரேவாரி மாவட்டத்தில் கடந்த வருடம் பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு கிராமங்களின் மாணவிகள் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.