Published : 06,Jul 2019 02:46 PM

நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது முதல்வருக்கு முன்பே தெரியும் - ஸ்டாலின்

Stalin-condemned-about-reject-the-bill-of-neet-against

நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று மத்திய பா.ஜ.க. அரசு, இவ்வளவு காலம் தாமதம் செய்துவிட்டு, கடைசியாக  உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியது. 

நீட் தொடர்பான கேள்விகள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்ட நிலையிலும், அது குறித்து பேசப்பட்ட நேரங்களிலும் இந்த மசோதா குறித்த முடிவினை அவையில் தெரிவிக்காமல் மூடி மறைத்து வைத்திருந்து, இப்போது நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது ஒரு வகையில் பாராளுமன்ற அவமதிப்பும் ஆகும்.

நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு அவரைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் நீட் விவகாரம் குறித்து கோரிக்கை விடுக்கவில்லை. அதன் உள்நோக்கம் “மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது” என்பது ஏற்கனவே முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கிறது என்பது இப்போது வெளிவந்திருக்கிறது. 

இந்த மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு எதிராக ஒரு கண்டனத் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப் பேரவையில் கொண்டு வந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், சமூக நீதியையும், கிராமப்புற மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நீட் தேர்வு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்