விருதுநகர்: வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி பட்டாசு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி - 4பேர் கைது
செய்தியாளர்: A.மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜ் (55). பட்டாசு விற்பனை தொழில் செய்து வரும் இவர், கடந்த திங்கட்கிழமை வீட்டில் இருந்துள்ளார். அப்போது காரில் வந்த இருவர், வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறியுள்ளனர். முறையாக வருமானவரி செலுத்தாமல் முறைகேடு செய்ததாகக் கூறிய அவர்கள், நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.50 லட்சம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து சௌந்தர்ராஜ் தனது உறவினர் மூலம் ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் மீதி பணத்தை வழங்குமாறு சௌந்தர்ராஜை செல்போனில் தொடர்பு கொண்ட மிரட்டியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் சௌந்தர்ராஜ் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து 3 தனிப்படைகளை அமைத்த டி.எஸ்.பி சுப்பையா தலைமையிலான போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், போலி அதிகாரிகளாக நடித்த சாத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், சுப்பிரமணி, கார் ஓட்டுநர் மகேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்த போது, தயில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் திட்டத்தின் படி, சௌந்தர்ராஜிடம் அதிகாரிகள் போல் நடித்து பணம் பறித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த சிவகாசி நகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.