“நிதியே ஒதுக்கவில்லை” - சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவுக்கு வந்த சோகம்!

கடந்த 9 வருடங்களாக சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவை மேம்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை 1 ரூபாய் கூட செலவிடவில்லை என புதிய தலைமுறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது
சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவு
சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவுபுதிய தலைமுறை

செய்தியாளர்கள் :மருதுபாண்டி

சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் போதிய வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடந்த 9 வருடங்களாக தீக்காய சிகிச்சை பிரிவை மேம்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை 1 ரூபாய் கூட செலவிடவில்லை என, புதிய தலைமுறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சிவகாசி அரசு மருத்துவமனை
சிவகாசி அரசு மருத்துவமனைபுதிய தலைமுறை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், சுமார் 1087 பட்டாசு ஆலைகளும், 2963 பட்டாசு கடைகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இவ்வாறு இயங்கி வருபவற்றில் விதிமீறல்கள் காரணமாக, ஆண்டுதோறும் 5 முதல் 10 விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

இத்தகைய சூழலில், சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் போதிய வசதிகள் இல்லை எனவும், இதன்காரணமாகவே, விபத்துகளில் தீக்காயம் அடைபவர்கள் மதுரை அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டம்

இதுதொடர்பாக புதிய தலைமுறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்களின்படி, “கடந்த 2015 முதல் கடந்த மார்ச் 10 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயத்தோடு சுமார் 206 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 36 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இக்காலக்கட்டத்தில், சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவை மேம்படுத்த எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்று தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன்

தீக்காய சிகிச்சை பிரிவில் போதிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம்.

அவர் பேசுகையில், ”இங்குள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் அதிநவீன சிகிச்சை வசதிகள் இல்லை. சென்னை, மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள அதிநவீன சிகிச்சை வசதிகள், சிவகாசியிலும் கொண்டு வரப்பட வேண்டும்” என்றார்.

விருதுநகர் ஆட்சியர்

தீக்காய பிரிவில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் குறித்து, விருதுநகர் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினோம்... அதற்கு விளக்கமளித்த அவர், ”சிவகாசி அரசு மருத்துவமனையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் தீக்காய சிறப்பு பிரிவு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத் தலைநகரில் மருத்துவக் கல்லூரி இருப்பதால் தீக்காயம் படுவோரை சிகிச்சைக்காக மாற்றுவது வழக்கமான நடைமுறைதான்” என்றார்.

சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி அய்யனார்,

மருத்துவமனை தீக்காய பிரிவில் அனைத்து விதமான வசதிகளும், அனைத்து விதமான உபகரணங்களும் இருக்கிறது“ என்று கூறினார்.

அனைத்து வசதிகளும் சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய பிரிவில் இருந்தால், காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் நடைமுறை ஏன்?...
மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவது ஏன்?

- என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், சிவகாசியிலே தீக்காயமடைந்தவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க அதிநவீன வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com