Published : 25,Dec 2017 07:29 AM
உலக அளவில் சிறந்த விக்கெட் கீப்பர் தோனிதான்: தேர்வுக்குழு தலைவர்

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான் உலக அளவில் சிறந்த விக்கெட் கீப்பர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.
தோனிக்கு 38 வயதான நிலையில் அவரது ஆட்டம் முன்பை போல் இல்லை என்று கூறி அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். அவரது ஓய்வு குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சு அடிபட்டு வருகிறது. சில முன்னாள் வீரர்களே தோனிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்திய அணியில் தோனியின் இடம் குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019 உலகக்கோப்பை வரை தோனி அணியில் இடம் பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. அவர் தற்போதும் சிறந்த வீரர். இன்றைய நிலையில் உலக அளவில் தோனிதான் சிறந்த விக்கெட் கீப்பர். அவருக்கு மாற்றாக நாங்கள் யாரையும் யோசிக்கவில்லை” என்றார்.
ஆனால் பிரசாத்தின் கருத்தை தலைமை தேர்வாளர் கிரன் மோர் ஏற்க மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தோனி தற்போதும் சிறந்த வீரர்தான். ஆடுகளத்தில் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து தோனி முக்கிய பங்காற்றுகிறார். ஆனால் 2019 உலகக்கோப்பைக்கு இன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. இடையில் தோனிக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மாற்று விக்கெட் கீப்பர் நம் வசம் இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் தோனி ஓய்வு பெற்ற பிறகு சாஹா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை தயார் செய்ய வேண்டும்” என்றார்.