Published : 15,Nov 2022 10:15 PM

800 கோடியை தாண்டிய மக்கள் தொகை ஏற்படுத்த போகும் 7 விளைவுகள்! எதிர்கொள்ள தயாரா?

7-impact-of-global-population-enlarge-and-its-result

உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளது. இன்று உலகின் எதாவது ஒரு பகுதியில் பிறந்திருக்கும் ஒரு குழந்தை, உலகின் மக்கள் தொகையில் 800 கோடியாக அதிகரிக்க செய்யும் என ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும் 2080ம் ஆண்டில், உலக மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும் என்றும் ஐ.நா கணித்துள்ளது.

இதில் இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாக உள்ளது. விரைவில் சீனாவின் மக்கள் தொகையான 142 கோடியே 60 லட்சத்தை தாண்டிவிடுவோம் என தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது. மனித இனத்தின் எண்ணிக்கையை இந்த பூமி சுமக்க முடியாத அளவிற்கு எல்லை மீறிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என பார்க்கலாம்..

image

1) தண்ணீர் தேவை

அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கும் அடிப்படையானது தண்ணீர் தான் அல்லவா? அதிகரித்த மக்கள் தொகையினால் நீர் பயன்பாடும், தேவையும் அதிகரிக்கும். இது காலப்போக்கில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இந்த தண்ணீர் பற்றாகுறையானது மனித இனத்துக்கு மட்டுமில்லை விலங்களுகள், பறவைகள் வரை நீடிக்கும்.

2) எரிபொருள் தேவை

பெருகிவரும் மக்கள்தொகைக்கு சமாளிக்க போதுமான எரிப்பொருள் ஆற்றல், கனிம வளங்கள் பூமியில் மிச்சம் இருக்கிறதா என்ற கவலையை தொற்றி கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து மிச்சம் இருக்கும் இயற்கை வளத்தை காக்க மனிதம் இனம் என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்ற கேள்வியை தொடர்ச்சியாக உலக சுற்றுசூழல் அமைப்புகள் கேட்டு வருகிறார்கள்.

3) உணவு தேவை

உணவு! மக்கள் தொகை பெருகும்போது அனைவருக்கும் உணவுப் பொருள் வழங்குவதும் , அவற்றிக்கான செயல் திட்டங்கள் வகுப்பதும், இறக்குமதிகள் செய்வதும் அரசின் கடமையாகிறது. ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பினால் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு நாட்டின் அரசும் திணறும். இது அரசின் மீதான நிதிசுமையாக அதிகரித்துக்கொண்டே செல்ல துவங்கும்.

4) இருப்பிடத் தேவை

மக்கள் தொகை அதிகரிக்கும் போது, மக்களுக்கான இருப்பிட தேவையும் அதிகரிக்கும். கடந்த 10 வருடங்களாகவே பெரும்பாலான விளைச்சல் நிலம், மேய்ச்சல் நிலம், ஏரி, குளங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் பக்கம் சென்றது. இந்த ஆபத்தான போக்கு தீவிரமடைந்து, மக்கள் தொகைப் பெருக்கத்தினால் பயிர் நிலங்கள் அளிக்கப்படும். இதனால் விளைச்சல் குறையும். விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு கூலிவேலைகள் போன்றவற்றை கையில் எடுக்கும் நிலை உருவாக்கும்.

image

5) வேலைவாய்ப்பு பிரச்னை

மக்கள் தொகை அதிகரிப்பினால் பட்டதாரிகளின் அதிகரிப்பும் கணிசமான அளவு உயரும். எனவே வேலை வாய்ப்புக் கொடுப்பதும் அரசின் பொறுப்பாகிறது. இதனால் தற்போது நாடு எதிர்க்கொண்டு வரும் வேலையில்லாப் பிரச்சினை கூடுதல் சுமையாக உருவெடுக்கும்.

6) பூமி வெப்பமடைதல்

பூமி வெப்பமடைந்து வருவதற்கான முக்கிய காரணமாக, அதிகரித்து வரும் மக்கள் தொகை கூறப்படுகிறது. ஏற்கனவே தொழிற்சாலைகளால் அதிகமாக ஒசோன் படலம் தேய துவங்கிவிட்டது. தற்போது அதிகரித்த மக்கள், கூடுதல் பொருள்கள் தேவையை உருவாக்கும். இதனால் கூடுதல் தொழிற்சலைகளின் தேவை உருவாகும். இது ஓசோன் படலத்தை மேலும் பாதிப்படைய செய்து, புவி வெப்பமடைவதை மேலும் தீவிரப்படுத்தி, காலநிலை மாற்றம், பேரிடர் போன்ற சூழலியல் பிரச்சனைகளை அதிகரிக்கும்.

7) தொற்று நோய் அச்சம்

கொரோனாவின் கோர பிடியிலிருந்து தற்போது தான் உலகம் சற்று மீண்டு வந்துகொண்டிருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவுகள், வீழ்ச்சிகளிலிருந்து இந்தியா உட்பட பல உலக நாடுகள் மீண்டு வர திட்டம் வகுத்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் மக்கள் தொகையின் விளைவு ஒவ்வொரு நகரத்திலும், ஊர், தெருக்களில் என மக்கள் நெருக்கத்தை அதிகரிக்க செய்யும். இதனால் சின்னசின்ன நோய் தொற்றுகள் கூட விரைவாக பரவி, கொரோனா போன்ற நோய் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து சுகாதார சீர்கெட்டை உண்டாக்கும். 

image

ஐ.நா. பொதுச் செயலாளர் கூறுவது என்ன?

ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்ரேஸ் கூறும்போது, ‘அதிகரித்து வரும் மக்கள் தொகையை வைத்து பன்முகத்தன்மை மற்றும் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக இதை நாம் எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டின் அரசும், மனிதனும் மனித குலத்திற்கான பொறுப்பையும் கவனத்தில் கொண்டு பூவியின் காப்பது அவசியமாகிறது.” என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் - கோட்டாக் மஹிந்திராவின் அடுத்த சி.இ.ஓ-க்கான போட்டியில் வாரிசு இல்லை!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்