Published : 10,Oct 2022 05:09 PM
வேலியே பயிரை மேய்வதா? - தூங்கிக்கொண்டிருந்த நபரின் செல்போனை லாவகமாக திருடிய காவலர்!

கான்பூரில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த நபரிடமிருந்து போலீஸ் ஒருவர் செல்போனை லாவகமாக திருடிச்செல்லும் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
பொதுவாக திருட்டு நடந்தால் போலீசாரிடம் புகாரளிப்போம். ஆனால் பொதுமக்களிடமிருந்து போலீசே திருடிச்சென்றால் யாரிடம் முறையிடுவது? இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது கான்பூரில் நடந்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சாலையோரம் ஒரு நபர் படுத்து உறங்கிக்கொண்டுள்ளார். அதிகாலை நேரத்தில் அந்த பகுதியில் சீருடை அணிந்த இரு போலீசார் நடந்துவருகின்றனர். அதில் ஒருவர், அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் அந்த நபரின் அருகில் சென்று அலேக்காக அவரிடமிருந்த செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்கிறார்.
பார்ப்பதற்கு அவர் கைதேர்ந்த திருடன் போல் எந்த சலனமுமின்றி செல்கிறார். அந்த போலீஸ் மதுபோதையில் இருந்தாரா அல்லது நோக்கத்துடன் செல்போனை திருடிச்சென்றாரா என்பது குறித்து எந்த விவரமும் இதுவரை இல்லை.
சட்டம் ஒழுங்கை கடைபிடித்து மதிக்கவேண்டியவர்களே அதற்கு எதிர்மாறாக நடந்துகொள்வது குறித்து நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.