Published : 12,Apr 2022 10:24 PM

டாணாக்காரன் படத்தை போல காவலர் பயிற்சிப் பள்ளியில் கொடுமைகள் நடக்கிறதா? - ஓர் அலசல்

any-atrocity-going-in-police-training-school-like-taanakaran-movie--An-analysis

டாணாக்காரன் திரைப்படத்தில் வருவது போல காவலர்கள் பயிற்சிப் பள்ளியில் கொடுமைகள் நடக்கிறதா? ஆங்கிலேயர் காலத்து பயிற்சிகள் அப்படியே தொடர்கிறதா அல்லது மாற்றப்பட்டு விட்டதா? அறியலாம் இந்தத் தொகுப்பில்.

இயக்குநர் தமிழ் இயக்கத்தில், விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது டாணாக்காரன் திரைப்படம். காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் கொடூரங்கள் தான் திரைப்படத்தின் மையக் கரு. நூற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறும் பள்ளியில் இயற்கை உபாதைகளுக்கு வெறும் 5 கழிவறைகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்ற கண்டிப்பான உத்தரவுடன் தொடங்கும் இந்தத் திரைப்படத்தில், பயிற்சியின்போது காவலர்கள் சந்திக்கும் இன்னல்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

டாணாக்காரன் || Tamil cinema Taanakaran movie preview

1998 ஆம் ஆண்டு காவலர் பயிற்சி பள்ளியில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தின் தழுவலாக இப்படம் எடுக்கப்பட்டதாகப் பேசப்படுகிறது. உண்மையிலேயே பயிற்சிப் பள்ளியில் கொடூரங்கள் அரங்கேறுகிறதா? பயிற்றுநரும், உயரதிகாரிகளும் தங்களது சர்வாதிகாரத்தை காட்டும் களமாக பயிற்சிப் பள்ளியை உருவாக்கியிருக்கிறார்களா? உண்மையில் என்ன நடக்கிறது.

உயரதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சிகள் நடப்பதால், இதில் முறைகேடுகளோ, கொடூரங்களோ அரங்கேற வாய்ப்பில்லை என்கிறார் ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட். அதே நேரம் கடுமையான பயிற்சிகள்தான் இக்கட்டான சூழலிலும் காவல்துறையினர் பின்வாங்காமல் பணியாற்றும் நெஞ்சுரத்தைத் தருகிறது என்றும் கூறுகிறார் ஜாங்கிட். காலத்திற்கு ஏற்ப காவல் துறையினருக்கான பயற்சிகள் மாற்றப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்துப் பயிற்சிகள் தற்போது புழக்கத்தில் இல்லை. மக்கள் சேவையை நோக்கி காவல்துறை வீறுநடை போடுகிறது என்றும் தெரிவித்தார் ஜாங்கிட்.

TaanakKaran | Official Teaser | Thaanakkaran Official Teaser | Vikram Prabhu | Tamizh - YouTube

காவல்துறை பயிற்சிப் பள்ளி பற்றி திரைப்படத்தில் விரியும் காட்சிகள் உண்மையில் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்த ஜாங்கிட். ஒருவேளை அப்படி நடந்தால் இன்றைய சூழலில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி விடும் என்பதையும் ஒப்பிட்டு, திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பது மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் என விளக்கினார்.