[X] Close

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: தமிழக எம்.பிக்களின் செயல்பாடுகள் எப்படி? – ஓர் அலசல்

சிறப்புக் களம்

Parliamentary-Winter-Session-How-Are-Tamil-Nadu-MPs-Acting-An-analysis

பெருவெள்ளத்தில் தமிழகம் சிக்கியதற்கு உரிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும், அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பி இருக்கிறார்கள், இது குறித்து விரிவாக காணலாம்.

நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மத்திய அரசின் ஏராளமான மசோதா நிறைவேற்ற களுக்கு பிறகு ஒருநாள் முன்கூட்டியே நிறைவடைந்திருக்கிறது. இந்த கூட்டத் தொடரை பொறுத்தவரை விவசாயிகள் மசோதா திரும்பப் பெற்ற விவகாரம், லக்கிம்பூர் மத்திய இணை அமைச்சரின் மகன் விவசாயிகளின் பேரணியில் காரை இயக்கி நான்கு விவசாயிகளை கொன்ற விவகாரம், 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் போன்றவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து கடும் அமளியில் ஈடுபட்டன.

image


Advertisement

அதேவேளையில் ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் மசோதா, அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தனது பணிகளையும் மேற்கொண்டது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களின் முக்கியமான அம்சங்கள் பெரிய அளவில் கவனம் பெறாமல் போனது எனினும், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல முக்கிய விஷயங்களை நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருந்தனர்.

கூட்டத்தொடர் தொடங்கிய போது தமிழகத்தில் பெரு வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை தேசிய அளவில் கவனம் பெறச் செய்ய திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே. வாசனும் பூஜ்ஜிய நேரம், கேள்வி நேரம் உள்ளிட்ட முக்கிய நேரங்களை பயன்படுத்தி இருந்தனர்.

image 

திமுகவின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்த நீட்தேர்வு விவகாரத்தை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அக்கட்சியின் உறுப்பினர்கள் கொண்டு சென்றனர். லக்கிம்பூர் உள்ளிட்ட விவகாரத்தை கொண்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய போதும், நீட் தேர்வுக்கு எதிரான பதாகைகளை கையில் கொண்டு திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தொடரில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி திமுகவின் வில்சன் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார்.

இந்தக் கூட்டத்தொடரில் தமிழகம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்த அணை பாதுகாப்பு  மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மீதான விவாதங்களில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் எதிர்ப்புகளை பதிவு செய்தனர், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் பேசும்போது இந்த மசோதாவை உடனடியாக தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதேபோல அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதிவு செய்தது போலவே இந்த மசோதாவிற்கு தங்களது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்வதாக பேசினார்.

இந்த கூட்டத்தொடரில் பெண்கள் சுய உதவி குழு தொடர்பான பூஜ்ஜிய நேரம் விவாதத்தின் பொழுது, சுயசார்பு இந்தியா திட்டத்தின் ஹிந்தி வார்த்தையான ஆத்ம நிர்பர் பாரத் வார்த்தையை உச்சரிக்க திணறியதும், இந்தி பேசாத மாநில மக்களும் எளிதில் பயன்படுத்தும் வண்ணம் மாநில அல்லது ஆங்கில மொழியில் திட்டத்திற்கான பெயர்களை வைக்க வேண்டுமென திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

image

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய சூழலில் இந்த விவகாரத்தையும் தமிழக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப தொடர்ந்து முயற்சிகள் செய்தனர். எனினும் தொடர் அமளியின் காரணமாக பெரிய அளவில் கவனம் பெறாமல் போனது.

இவை தவிர 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து தொடர்ந்து போராட்டங்களிலும், பேரணிகளும் திமுக உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். இதில் திமுகவின் திருச்சி சிவா தமிழில் நாடாளுமன்ற வளாகத்தில் பாடல்களை பாடியது பிற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றதுடன் சமூக வலைதளத்திலும் வைரல் ஆனது.

- நிரஞ்சன்குமார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close