Published : 12,Dec 2021 10:26 PM
“17ஆம் தேதி தமிழ்நாட்டில் விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கிறேன்” - ராகேஷ் திகாயத்

பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் வரும் 17-ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ள விவசாயிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு டெல்லி எல்லையில் போராடிய விவசாய சங்கங்களில் இவரது சங்கமும் ஒன்று.
“விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு எங்களுக்கு அழைப்பு கோரப்படும் இடங்களில் நாங்கள் பங்கேற்போம். வரும் 17-ஆம் தேதி நாங்கள் தமிழ்நாடு செல்கிறோம். அங்கு விவசாயிகளை சந்தித்து முடித்ததும் 19-ஆம் தேதி மகாராஷ்டிரா செல்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கிசான் அந்தோலன் மேளா நடைபெறும். அதே போல விவசாயிகள் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து பேச மகா பஞ்சாயத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும்” என தெரிவித்துள்ளார் அவர்.
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுக் கொண்டதை அடுத்து சுமார் ஒரு வருட காலம் டெல்லி எல்லையில் அந்த சட்டங்களை எதிர்த்து போராடி வந்த விவசாயிகள் தங்களது சொந்த மாநிலத்திற்கு டிராக்டர், டிரக், ஜீப் மாதிரியான வாகனங்களில் திரும்பிக் கொண்டுள்ளனர்.