[X] Close

பருவநிலை மாற்றத்தால் தன்மை மாறும் பழங்கள், காய்கறிகள் - எச்சரிக்கையூட்டும் ஆய்வுகள்

சிறப்புக் களம்,சுற்றுச்சூழல்

Analysis-on-Nutritional-changes-in-fruits-and-vegetables-due-to-climate-change

பருவநிலை மாற்ற பிரச்னைகள் மழை, வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி என பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் உணவுப் பொருட்களின் தன்மையிலும் கூட மாற்றம் இருக்கும் என அதிர்ச்சித் தகவல் ஆய்வொன்றில் வெளியாகியுள்ளது.


Advertisement

அந்த ஆய்வறிக்கை வழியாக வருங்காலத்தில் பருவநிலை பாதிப்பின் அவலங்களால் உடையக் கூடிய உருளைக் கிழங்கு - சுருங்கி, இறுகிப்போன ஆப்பிள்கள் போன்றவை உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் ஆய்வறிக்கையில், ‘பருவநிலை மாற்றத்தால் பல நாடுகள் அடிக்கடி வறட்சியை சந்தித்து வருவதால் பழங்கள், காய்கறிகளின் தன்மை மாறும். பழங்கள் சுருங்கி, இறுகுவதால் அவற்றின் வடிவம் மற்றும் சுவை மாறுவதுடன் சத்துகளும் குறையும். சமீபகாலத்தில் ஆஸ்திரேலியாவில் அடிக்கடி வறட்சி ஏற்படுவதை காண முடிகிறது. இந்த வறட்சியாவும், அந்நாட்டு பழ ஏற்றுமதியை வெகுவாக பாதிக்க தொடங்கும்.

image


Advertisement

தொடர்ந்து பருவநிலை மாற்றம் எதிரொலியாக ஆஸ்திரேலியாவில் ‘கடும் வறட்சி’ என்பது தொடர் கதையாகும். இந்த வறட்சியினால், அந்நாடு பெரிய பாதிப்புகளை சந்திக்கும்’ என்று கூறுகின்றனர். அண்மைக்கால தொடர் வறட்சிகளால் ஆஸ்திரேலிய விவசாயிகளின் வருமானம் 23 சதவிகிதம் குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளதையும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் இப்பிரச்னையை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் சமாளிக்க ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தும் காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள் என்ன, அடுத்தடுத்த ஆண்டுகளில் இதனால் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவாக, காலநிலை அளவீடுகளில் ஏற்படும் மாற்றங்களையே காலநிலை மாற்றம் என்கிறோம். இதில் நாம் உணரவேண்டிய முதல் மற்றும் மறுதலிக்கமுடியாத விஷயமாக, காலநிலை மாற்றத்திற்கு மனித செயல்பாடே முக்கிய காரணமாக இருக்கிறது. இயற்கையாக காலநிலை மாற்றம் நிகழ்வது குறைந்துள்ளது. அப்படி மனிதன் என்ன செய்தான் என நாம் நினைக்கலாம். காடுகளை அழிப்பது, மரங்களை வெட்டுவது, அதிக அளவிலான வாகன பயன்பாடு, தொழிற்சாலைகள், அணுசக்தி தயாரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கரியமில வாயு வெளியீடு அதிகரிப்பு, கரியமில வாயு அதிகரிப்பால் புவி வெப்பமாகி காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது.


Advertisement

image

இவையாவும் மனிதர்கள் செய்பவைதானே தவிர இயற்கையாக நிகழ்பவையல்ல. இப்படியான மனித செயல்பாடுகளால், பூமியின் மேற்பரப்பில் இருக்கக்கூடிய பசுங்குடில் வாயுக்களும் அதிகரித்துக் கொண்டிருகின்றன. இவைபோக, அண்மைக் காலங்களில் ஏற்படக்கூடிய பருவம் தப்பிய மழை, வறட்சி, வெள்ளம், புயல், அதீத வானிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல் என சுற்றுச்சூழலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் இந்த காலநிலை மாற்றம் தான் முக்கிய காரணம். இவையாவும் இயற்கையாக ஏற்படுவது போல தெரிந்தாலும், இதன் பின்னணியில் இருப்பது மேற்சொன்ன மனிதர்களின் செயல்பாடுகள்தான்.

அடுத்த 5 ஆண்டுகளில் புவியின் வெப்ப நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் கரியமில வாயு, பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பால் இயல்புக்கு மாறாக பூவி கொஞ்சம் கொஞ்சமாக வெப்பமடைகிறது. இது தொடரும்பட்சத்தில் காலநிலை மாற்றத்தால் பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வளிமண்டலத்தில் கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால் இயல்புக்கு மாறாக வெப்பமடைந்து, கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புவியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸாக புவியின் வெப்ப நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலநிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் இருந்து வந்தாலும், அண்மைக் காலமாக பூமியின் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தற்போது நிலவி வரும் சூழ்நிலை தொடரும் பட்சத்தில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளேயே வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என உலக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இந்த காலநிலை மாற்றத்தால் பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

image

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் பேசுகையில், “1986 பிப்ரவரிக்கு பிறகு பிறந்த எந்த குழந்தையும், இதுவரை ஒரு இயல்பான மாதத்தை பார்த்தது கிடையாது. அந்தளவுக்கு, ஒவ்வொரு மாதமும் தன்னுடைய இயல்பிலிருந்து மாறியே இருந்திருக்கிறது. அப்படியான ஒவ்வொரு மாற்றங்களும், நம் விவசாயத்தை பெருமளவு பாதித்துள்ளது. 18 - 25 % இப்படியான பருவம் சார்ந்த சிக்கலினால் நம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. இன்னொருபக்கம், நிலங்கள்யாவும் அதிக வெப்பத்தை கொண்டு, பாலை வனமாக மாறி வருகிறது. சரியாக சொல்லவேண்டுமென்றால், உலகம் முழுவதும் 27 - 30% நிலப்பரப்பு, பாலைவணமாகிக் கொண்டிருப்பதாக சர்வதேச உச்சி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாலைவனம் என்றாலே மணற்பரப்பாக இருக்க வேண்டும் என்று கிடையாது. எந்த நிலப்பரப்பில் மனிதன் வாழ முடியாமல் இருக்கிறானோ, அதுவே பாலைவனம். அப்படி 27 - 30% மாறியுள்ளது.

ஒருபக்கம் அதிதீவிர கால நிலை மாற்றங்கள் யாவும் வெள்ளம், வறட்சி, வெப்பம், அதீதிவிர மழை போன்றவற்றின்மூலம் நடக்கிறது. இவற்றோடு நிலங்கள் பாலைவனமாகி வருகிறது. இப்போது, இந்த விவசாய பாதிப்பும் ஏற்படும் என்கிறது விஞ்ஞானம். இந்த விவசாய பாதிப்பு, உற்பத்தியாகும் பாதிப்பு போன்றவையாவும் ஏற்படுவதன் பின்னணியில், வளிமண்டலத்தில் கார்பன் அதிகரிப்பே காரணம். கார்பன் அதிகரிக்க அதிகரிக்க, அதை சுவாசிக்கும் உயிர்கள் எல்லாமே பாதிக்கப்படும். அப்படித்தான் விவசாய நிலங்களும், பழங்களும், காய்கறிகளும். பழங்கள் காய்கறிகளின் அடிப்படையே ஒளிச்சேர்க்கைதான் (Photosynthesis). அப்படி ஒளியை பெறும் பழங்களும் காய்கறிகளும், கார்பனை உட்கரித்துக் கொள்ளும்போது அதன் வடிவத்திலும் தன்மையிலும் மாறுபாடுகள் ஏற்படும். குறிப்பாக அந்த காய்கறி, பழத்தின் தன்மையும் தரமும் மாறும்.

இந்த பாதிப்புகளை மும்முனை தாக்குதலாகவே நாம் பார்க்கவேண்டும். முதலில் அதீத மழை, அதீத வெயில், பருவம் தப்பிய மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள். அடுத்தபடியாக பாலைவனமாகி வரும் நிலத்தினால் ஏற்படும் பிரச்னைகள். மூன்றாவதாக காற்றில் கார்பன் அதிகரிப்பதால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைவு சார்ந்த இந்தப் பிரச்னைகள். இதில் நாம் கவலை கொண்ட முக்கியமான விஷயமாக, ஊட்டச்சத்து குறைவென்பது இருக்கிறது. ஏனெனில், இதுநாள் வரை 100 கிராம் ஊட்டச்சத்து ஒரு ஆப்பிளை உட்கொண்டால் கிடைக்குமென்றால், இனி 2 ஆப்பிளை எடுத்தால்தான் அப்படி கிடைக்குமென்ற நிலை உருவாகும். ஆனால் 2 ஆப்பிளை விளைவிக்க நம்மால் முடியாது. அதன்பின்னணியிலும், காலநிலை மாற்றம் - பருவம் தப்பிய மழை போன்றவையே இருக்கும்.

மானுட இருப்பியலுக்கான அச்சுறுத்தல்தான் இது.

image

இந்தளவுக்கான ஆபத்தான கார்பன்-ஐ குறைக்க அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாரிஸ் ஒப்பந்தத்தில், குறிப்பிட்ட ஆண்டுக்குள் இவ்வளவு கார்பன் வெளியேற்றத்தை குறைத்துக்கொண்டு கார்பன் சமநிலையை ஏற்போம் என, அமெரிக்கா போன்ற சில நாடுகள் தவிர்த்து, பிற உலக நாடுகள் ஒவ்வொன்றும் தனக்கான இலக்கை நிர்ணயித்துக்கொண்டது இங்கே கவனிக்கத்தக்கது. ஆனால், எந்த நாடுமே இதை முழுமையாக பின்பற்றவில்லை என்பது வேதனையிலும் வேதனை. இதில் வெளியேறிய நாடுகளும் கவனிக்கத்தக்கது. அதிலும் அமெரிக்கா மிக மிக முக்கியமான நாடு. காரணம், உலகளவில் அதிக கார்பனை வெளியேற்றும் நாடுகளுக்கான பட்டியலில் இரண்டாவது இடம் அமெரிக்காவுக்குத்தான் உள்ளது. முதலிடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா வெளியேறி இருந்தது. இப்போது பைடன் ஆட்சிக்கு பிறகு, அவர்கள் மீண்டும் இணைவார்கள் என நம்புகிறோம். ஆனால், இணைந்தால் மட்டும் போதாது. ஒத்துழைப்பும் செய்ய வேண்டும். அமெரிக்கா மட்டுமன்றி, பிற நாடுகளும் இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி: ஒவ்வொரு ஆண்டும் தொடரும் இயற்கையின் துயரம்: காசிரங்கா பூங்காவின் இப்போதைய நிலை என்ன?

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளையெல்லாம் பார்க்கும்போது, அனைத்துமே இறுதியில் ஊட்டச்சத்து குறைபாடு, பஞ்சம் ஆகியவற்றில்தான் முடிகிறது. இப்படியான சூழல் உருவாகும்போது, மூன்றாம் உலக நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நாடுகளும்தான் மிகமோசமான பாதிப்பை சந்திக்கும். போலவே பெண்களும் குழந்தைகளும்தான் அதிக பாதிப்பை சந்திப்பர். என்னதான் இந்த காலநிலை மாற்றத்துக்கு வர்க்க பாகுபாடு இல்லையென்றாலும், இதனால் வர்க்க வேறுபாடுகள் ஏற்பட இருக்கிறது. ஆகவே அரசுகள் தங்களின் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். இல்லையென்றால், இதற்கு தீர்வு கிடைக்காது” என்றார் அவர்.


Advertisement

Advertisement
[X] Close