[X] Close

“‘வெள்ளை இல்லை; பச்சை... ஏழை மக்களுக்கும் புரியும் அறிக்கை” - நிபுணர்கள் சொல்வது என்ன?

சிறப்புக் களம்

special-analysis-about-ptr-palanivel-thiyagarans-white-paper

அதிமுக ஆட்சியின் கடந்த பத்தாண்டு கால நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகரான் வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சத்து 70ஆயிரத்து 189 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ஆயிரம் ரூபாயாக உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 92,305 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் கடந்த 5 ஆண்டுகளில் 39,079 கோடி ரூபாய் மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வரிவருவாய் வளர்ச்சி திமுக ஆட்சிக்காலத்தில் 11.4 சதவிகிதமாக உயர்ந்திருந்தது எனவும் 2016-2021ல் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 சதவிகிதமாக சரிந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிதியமைச்சர், “வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதகமானது. அரசிடம் வராத வரிவருவாயை முறையாக வசூலிக்கப்படும். ஜீரோ பட்ஜெட் பணக்காரர்களுக்கே சாதகம். அதிமுக ஆட்சியில் கொரோனாவுக்கு முன்பே 1.34 லட்சம் கோடியாக இழப்பு அதிகரித்துள்ளது. வாகன வரி கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் மாற்றப்படவே இல்லை. மானியங்களுக்கு அதிகமாக செலவிடும் நிலையில் சரியான பயனாளிகள் யார் யார் என்பது பற்றிய விவரம் இல்லை. மானியம் பெறுபவர்களை அடையாளம் கண்டு முறைப்படுத்த தெளிவான திட்டம் வகுக்கப்படும்.

image


Advertisement

முந்தைய ஆட்சிக்காலத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் தவறான செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள. வாங்கிய கடன்களுக்காக தமிழக அரசு செலுத்தும் தினசரி வட்டி 87 கோடி ரூபாயாக உள்ளது. தமிழகத்தில் இக்கட்டான நிலையிலுள்ள பொருளாதாரத்தை 5 ஆண்டுகளில் சீர்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பொருளாதாரத்தை சீர்படுத்துவது என்பது அதிரடியான மாற்றம் மூலமே சாத்தியம். எத்தகைய மாற்றத்திற்கும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” என்றார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “ஆகஸ்ட் 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக வெள்ளை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதுதான் மரபு. அதை மீறி முன்கூட்டியே வெள்ளை அறிக்கை வெளியிட்டிருப்பதால் சில விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. தேர்தல் நேரத்தில் நிறைய வாக்குறுதிகளை திமுக கொடுத்துள்ளது. அதை நிறைவேற்றமுடியாத சூழ்நிலையில், இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டு திசை திருப்புகிறது. அடுத்தவர்கள் மேல் பழி போடுகிறார்கள். நாங்கள் எல்லாம் செய்ய நினைத்தோம். ஆனால் அதற்கு வழியில்லை என பொய்யான தகவலை பரப்பி திசை திருப்பும் முயற்சியாகத்தான் இதை பார்க்க முடியும்.

அவருடைய அறிக்கையில் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. எந்த ஆட்சி காலத்தில் மாநிலத்தின் வரிவருவாய் குறைந்துள்ளது என்று பார்க்க வேண்டும். மக்கள் நிலையை தெரிந்துதான் ஆட்சி செய்ய வேண்டும். படித்துவிட்டு வந்தால் மட்டும் ஆட்சி நடத்த முடியாது. அனுபவம் இல்லை என்பதன் அடிப்படையில்தான் அவருடைய வெளிப்படைத்தன்மை இருக்கிறது. அதிமுக ஆட்சியில் பஸ்கட்டணம் உயர்த்தவில்லை, மின்கட்டணம் உயர்த்தவில்லை என்பதை நிதியமைச்சரே ஒப்புக்கொள்கிறார். அதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்? பேருந்து கட்டணத்தையும் மின்கட்டணத்தையும் உயர்த்தபோகிறோம் என்கிறாரா?


Advertisement

image

50 ஆயிரம் கோடி கடன் வாங்கக்கூடிய அளவிற்கு தான் நிதிநிலையை அதிமுக வைத்துவிட்டு சென்றிருக்கிறோம். திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி கடன் வாங்கினார்களே? அதற்கு யார் வட்டி கட்டுவார்கள்? அதற்கு 10 ஆண்டுகளாக வட்டி கட்டினோமே?” என்றார்.

இதுகுறித்து பேசிய திமுக சரவணன் “வெள்ளை அறிக்கை என்பது கட்டாயம். ஒரு கடமை. அதிமுக மீது குற்றச்சாட்டுகளை வைத்தபோது ஆதாரம் இருக்கிறதா என்று கேள்வி எழுந்தது. அதற்கு இது பதில்போல் அமைந்துள்ளது. ஆயிரம் கோடி பக்கமாக எப்படி எங்கு போனது என்றே தெரியவில்லை. ஊழல் மூலமாகவும் லஞ்சம் மூலமாகவும்தான் இது போயிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் சுரண்ட முடியுமோ அப்படியெல்லாம் கொள்ளையடித்துள்ளனர். எவ்வளவு கடன் வாங்குகிறோமோ அதை மூலதனத்திற்குதான் செலவு செய்ய வேண்டும். 50 சதவீதம் மட்டும் அதில் போட்டோம் என்றால் அது தவறுதான். அதைத்தான் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டதால்தான் 2013 வரை அதிமுகவால் சரியாக நடத்த முடிந்தது. அதன்பின்னர்தான் நிலைமை சீர்கெட்டது.

image

அதிமுகவின் ஜெயக்குமார் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. நிதியமைச்சருக்கு அனுபவம் இல்லை என்கிறார். அவர் படித்தவர் மட்டும் இல்லை. மக்களோடு பழகி அனுபவம் பெற்றவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. பணக்காரர்களுக்கும் சாதாரண ஏழை மக்களுக்கும் ஒரே வரி விதிப்பது எப்படி நியாயம் என்று கேட்டார் நிதியமைச்சர். மக்கள் அரசு என்றெல்லாம் அதிமுக பேச வேண்டாம். மக்களை சுரண்டிய அரசுதான் அதிமுக அரசு” என்றார்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கூறுகையில், “நிதியமைச்சர் வெளிப்படைத்தன்மையாக பேசியதாகத்தான் நான் உணர்கிறேன். பல தவறுகளையும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். சில சிஷ்டம்களை திருத்துவது என்பது எவ்வளவு கடினம் எனபதையும் விளக்கியிருக்கிறார். ஆனால் இது திறந்தநிலை அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்திற்கு வெளியே. இதுபோன்ற அறிக்கைகளை வெள்ளை அறிக்கை என்று கூறுவது இல்லை. இது பச்சை அறிக்கைதான். வெள்ளை அறிக்கை என்பது நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டம் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். அதில் மக்கள் விவாதம் வரும். ஆனால் பச்சை அறிக்கை என்பது பொதுவான நிலையை கூறிவிட்டு மக்களிடம் இருந்து கருத்துக்களை வரவேற்பது. என்ன செய்யப்போகிறோம் என்று அவர் இன்று கூறவில்லை.

பொதுமக்களிடம் இதுகுறித்து விவாதம் இருக்கும். பயமும் இருக்கும். தேர்தல் வாக்குறுதிகளை திமுக எப்படி நிறைவேற்றப்போகிறது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close