[X] Close

ரெம்டெசிவிரும் தேவையில்லை, சிடி ஸ்கேனும் தேவையில்லை - ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமார்

இந்தியா,சிறப்புக் களம்,தமிழ்நாடு

கொரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமாருடன் 'புதிய தலைமுறை' நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் சிறப்பு நேர்காணல் நடத்தினார். அதில், பிரியா சம்பத்குமாருடன் பகிர்ந்து கொண்டவை இங்கே...


Advertisement

தொற்றின் வேகம் முதல் அலையை விட 2-வது அலையில் அதிகமாக இருப்பது ஏன்?

"உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. அதேபோல வீட்டில் இருக்கும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும்போது, அதிக நெருக்கம் காரணமாக அதிகப்படியான வைரஸ் நுரையீரலை சென்றடைகிறது. இதனால் நோயின் வீரியமும் அதிகமாக ஆகிறது. 


Advertisement

முதல் அலையில் குடும்பத்தினுள் கொரோனா வைரஸ் பரவும் விகிதம் 30 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது 100 சதவிகிதமாக மாறியிருக்கிறது. ஆகையால் குடும்பத்தினுள் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் அவரை முதலில் தனிமைப்படுத்த வேண்டும். பிறர் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்."

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்த பின்னர் தனது உடலை எவ்வாறு பேணிப் பாதுக்காக்க வேண்டும்?

"கொரோனா வைரஸ் என்பது நுரையீரலை மட்டுமல்லாது, உடலின் இதர உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கிறது. ஆகையால் இணை நோய் உள்ளவர்கள் அவர்களது உடலை நன்றாக பேணிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதிக எடையுள்ளவராக இருந்தால் எடையை குறைக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். உணவை பொறுத்தவரை சர்க்கரை அளவை மட்டும் கட்டுக்குள் வைத்து என்ன பிடிக்கிறதோ அதை உண்ணலாம்."


Advertisement

ரெம்டெசிவிர் மருந்து அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற மருந்துதானா?

"கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அதிகமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும். அந்த சமயத்தில் ஸ்டீராய்டு எடுக்கும்போது அது வைரஸ் அதிகரிக்க உதவி புரியும். ஆதலால்தான் ஆரம்ப கட்டத்தில் ஸ்டீராய்டு ஆபத்தானது என்று கூறுகிறோம்.

நோயாளிக்கு ஆக்சிஜன் தேவைப்படும்போது நமது உடல் கொரோனாவை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் வீக்கத்தை (inflammation) குறைக்க ஸ்டீராய்டு எடுத்துக்கொள்ளலாம்.

நோயாளிகள் ரெம்டெசிவிர் எடுத்துக்கொள்வதால் அவர்கள் மருத்துவமனையில் தங்கும் நேரம் குறைவாக இருக்கிறது. ஆகையால் இது யாருக்கும் எதற்கும் பயனில்லை."

ஸ்டீராய்டு எடுத்துக்கொள்வதால் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது என்ற தகவல் உள்ளதே?

"கருப்பு பூஞ்சை தொற்று நோய் அதிகமாக ஸ்டீராய்டு கொடுத்தால் ஏற்படும். சர்க்கரை நோய் அதிகமுள்ளவர்களுக்கு ஸ்டீராய்டு கொடுக்கும்போது அவர்களது சர்க்கரை அளவு கட்டுக்கடங்காத அளவில் செல்கிறது. இதனாலும் கருப்பு பூஞ்சை தொற்று நோய் ஏற்படுகிறது."

ஊரடங்கு அவசியம் தானா? இதனால் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதே?

"ஊரடங்கு நிச்சயம் அவசியம். அதன் பலன் ஒன்று இரண்டு வாரங்களுக்கு பிறகுதான் தெரியும். வாழ்வாதாரத்தை விட வாழ்க்கை முக்கியம். ஆகையால் இந்தத் தருணத்தில் நாம் வாழ்க்கை குறித்துதான் யோசிக்க வேண்டும்."

கர்ப்பிணிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?

"கர்ப்பிணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். நியூயார்க்கில் பைசர் உள்ளிட்ட தடுப்பூசிகளும் கர்ப்பிணிகளுக்கு நன்றாக வேலை செய்திருக்கிறது.

தடுப்பூசிகளை பொறுத்தவரை முன்பதிவு செய்து தடுப்பூசி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக  இது சாமானியனுக்கும் சென்று சேரும் வகையிலான திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தற்போது கையில் இருக்கும் ஒரே தடுப்பூசி முகக்கவசம் ஒன்றுதான். அது இரண்டு அடுக்கு கொண்ட முகக்கவசமாக இருக்க வேண்டும். அதனை வழிமுறைகளின் படி முறையாக பயன்படுத்த வேண்டும். அதேபோல சிடி ஸ்கேனும் நோயாளிகளுக்கு தேவையில்லை. அதற்கு பதிலாக பல்ஸ் ஆக்சிமீட்டரை பயன்படுத்தலாம்."


Advertisement

Advertisement
[X] Close