பிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): "வரலாறு என்னை விடுதலை செய்யும்"

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

“நான் வெறும் 82 பேருடன் புரட்சியைத் தொடங்கினேன். மீண்டும் அதை நான் செய்யவேண்டியிருந்தால், முழுமையான நம்பிக்கை கொண்ட 10 அல்லது 15 பேருடன் செய்திருப்பேன். உங்களுக்கு நம்பிக்கையும் செயல்திட்டமும் இருந்தால், நீங்கள் எவ்வளவு சிறியவர் என்பது முக்கியமல்ல” என்று எதிர்கால தலைமுறையின் விடியலுக்கான சொற்களில் வைரங்களை வைத்துவிட்டுச் சென்ற கியூபப் புரட்சியின் விதைநெல் ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்த நாள் இன்று.


Advertisement

image

லத்தீன் அமெரிக்காவில் நடந்த கம்யூனிசப் புரட்சியின் நம்பிக்கை முகம், கியூப மண்ணை முதல் பொதுவுடைமை அரசாக மாற்றிய புரட்சிப் போராளி ஃபிடல் காஸ்ட்ரோ. உலகில் கம்யூனிச ஆட்சிகள் வீழ்ந்துகொண்டிருந்த நிலையில், தன் மிகப்பெரிய எதிரியாக கருதப்பட்ட அமெரிக்காவின் முன் செந்நிறக்கொடியைப் பறக்கவிட்டவர். கியூபாவை மக்களிடம் அளித்து அழகுபார்த்த மாபெரும் தலைவராக அவர் அரசியல் விமர்சகர்களால் புகழப்பட்டார்.  


Advertisement

கியூபாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பிரான் என்ற கிராமத்தில் 1926 ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று பிறந்தார். தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ ஒய் அர்கிஸ், ஸ்பெயின் நாட்டில் இருந்து  புலம்பெயர்ந்த பெரும் கரும்பு விவசாயி. முதல் மனைவி மறைந்த பின், தன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த கியூபாவைச் சேர்ந்த லினாரஸ் கொன்சாலஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அவர் வாழத் தொடங்கினார்.

image

அந்த தம்பதிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் ஒருவர்தான் ஃபிடல் காஸ்ட்ரோ. சகோதரர் ரவுல் தவிர மற்ற ஐந்து குழந்தைகளும் பெண்கள். சாண்டியாகோ டி கியூபாவில் இருந்த ரோமன் கத்தோலிக்கப் பள்ளியில் பயின்ற அவர், அடுத்து பெலன் நகரத்துப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். படிப்பைவிட விளையாட்டில் ஆர்வம் பெருக மிகச்சிறந்த தடகள வீரராகத் திகழ்ந்தார் பள்ளி மாணவரான ஃபிடல்.


Advertisement

1945 ஆம் ஆண்டு ஹவானா பல்கலைக்கழகச் சட்டப்பள்ளியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போது மேடைப்பேச்சாளராக உருவாகி, தன் வாதத் திறன்களை மெல்ல வளர்த்துக்கொண்டார். இங்குதான் ஃபிடலுக்கு காதல் முதல் அரசியல் வரையிலான எதிர்கால வாழ்வின் அடித்தளங்கள் அத்தனையும் தொடங்கப்பட்டன. பின்னர் நடந்ததெல்லாம் நாம் அறியும் உலகப் புரட்சியின் வரலாறு.

image

கல்லூரிப் பருவத்திலேயே அரசியலில் ஆர்வம்கொண்டிருந்த ஃபிடல் காஸ்ட்ரோ, ஊழலில் திளைத்திருந்த அதிபர் ராமோன் கராவ் தலைமையிலான கியூப அரசை சீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அன்று முதலே போராட்டங்கள் அவருடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. காவல்துறையால் தேடப்படும் பட்டியலில் ஃபிடலின் பெயரும் சேர்ந்துகொண்டது.  

பல்கலைக்கழக மாணவராக  கியூப ஊழல் அரசுக்கு எதிராக அவர் நிகழ்த்திய உரை மக்களிடம் மிகவும் பிரபலமானது. அந்தப் பேச்சின் வழியாக இளம் புரட்சியாளரை அனைவரும் அடையாளம் கண்டனர். 1947 ஆம் ஆண்டு டொமினிக் குடியரசில் அந்நாட்டு மாணவர்களுடன் சேர்ந்து ரஃபேல் டிராஜிலோ ஆட்சியைக் கலைக்கும் ஃபிடலின் முயற்சி, அமெரிக்க ஆதரவுடன் தடுத்துநிறுத்தப்பட்டது.

புரட்சியின் கனல் அரும்புவிட தொடங்கிய காலகட்டத்தில் 1948-ஆம் ஆண்டு குடும்பங்களின் எதிர்ப்பை மீறி மிர்தா டையாஸ் பாலார்ட் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

image

1952 ஆம் ஆண்டு கியூபாவில் கார்லஸ் ப்ரியோவின அரசை ராணுவப் புரட்சியின் மூலம் கைப்பற்றினார் ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா. உடனடியாக அவரது ராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக புரட்சி விதைகளைத் தூவத் தொடங்கினார் ஃபிடல்.  மோன்கடா நகரத்தில் இருந்த ஆயுதக்கிடங்குகளைத் தகர்க்கும் முயற்சியில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார்.

அந்த மிகப்பெரும் அதிரடி தாக்குதலுக்குப் பிறகு அக்டோபர் 16, 1953 அன்று பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய நான்கு மணி நேர உரையின் தலைப்புதான் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’. அந்தப் பேச்சு பிறகு அவரது ஜூலை 26 இயக்கத்தின் அறிக்கையாக மாறியது. நீதிமன்றத்தில் அவர் முன்வைத்த வாதத்தின் இறுதியாக இருந்த வரிகளும் அதுதான்: "வரலாறு என்னை விடுதலை செய்யும்".

ஆயுதக்கிடங்கு தாக்குதல் முயற்சிக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை.  பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட 19 மாதங்களுக்குப் பிறகு ஃபிடல் காஸ்ட்ரோ, 1955ல் விடுதலை செய்யப்பட்டார். பின்னாளில் அந்த ஆண்டுதான் கியூபப் புரட்சியின் வரலாற்றில் மிக முக்கியமானதாக மாறியிருந்தது. அப்போது மெக்சிகோவில், தன் வருங்கால புரட்சிகர சகாவான எர்னஸ்டோ சே குவேராவை ஃபிடல் சந்தித்தார்.

1956, நவம்பர். மெக்சிகோவில் இருந்து மிகச்சிறிய படகில் சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 81 போராளிகள் கியூபாவுக்குப் பயணமாயினர். படகின் பெயர் கிரான்மா. அந்த இளைஞர்களின் மனங்களில் ஆணவ அதிகாரப் பெருங்காட்டைப் பொசுக்கும் புரட்சி தீப்பொறி எரியத் தொடங்கியிருந்தது. கியூபப் புரட்சி வெற்றிபெறும் 1959 ஜனவரி வரையில் மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்து கொரில்லா போர்முறையில் தீவிரமாக ஈடுபட்டது இந்தப் போராளிகள் குழு.     

image    

புரட்சிக்குப் பிறகு கியூபாவில் அமைக்கப்பட்ட கம்யூனிச அரசில் 1959 பிப்ரவரியில் பிரதமராகப் பொறுப்பேற்றார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதைத்தொடர்ந்து சிலரின் பதவி விலகல்களுக்குப் பிறகு 1976 முதல் 2008 பிப்ரவரி வரையில் கியூபாவின் பெருமைக்குரிய அதிபராக அவர் நீடித்தார். அதாவது பிரதமர் மற்றும் அதிபராக கியூபாவில் ஃபிடல் ஆட்சிசெய்த காலங்களில், அமெரிக்காவில் பத்து பேர் அதிபர்களாக இருந்துள்ளனர். 

தன் 90 வயதில் 2016 நவம்பர் 25 ஆம் தேதியன்று காற்றில் கரைந்துவிட்ட ஃபிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கையும் போர்க்குணமும், இன்று உலகமெங்கும்  சமூக அரசியல் போராட்டங்களில் முன்வரிசையில் நிற்கும் இளைஞர்களின் மனங்களில் வெளிச்சங்களாக பரவியிருக்கின்றன.

loading...

Advertisement

Advertisement

Advertisement