சென்னை அருகே கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த முகேஷ், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று தனது நண்பரான விஜய் வீட்டிற்கு சென்றுள்ளார். முகேஷ் மற்றும் விஜய் இருவரும் வீட்டிற்குள் இருந்த நிலையில், விஜய்-யின் அண்ணனான உதயா வெளியே இருந்து கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக விஜய் வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். உதயா உள்ளே சென்று பார்த்தபோது, முகேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரின் நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறது.
உடனடியாக உதயா இதுகுறித்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்க, முகேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தாழம்பூர் போலீசார் உதயாவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜய்யை போலீசார் தேடி வருகின்றனர். விஜய்யை பிடித்தால் மட்டுமே துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது..? எதனால் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்ற விவரங்கள் தெரியவரும்.