[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

மாயாவதியின் யானையும் தேவகௌடாவின் சிம்மாசனமும்

karnataka-election-update-for-bahujan-samaj-party

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது நாங்கள்தான் என காங்கிரசும், பாஜகவும் மாறி மாறி கூறிக்கொண்டிருக்கும்
நிலையில்  ”நாங்கள் 90 இடங்களைக் கைப்பற்றுவோம். சுயேச்சைகள், மாயாவதி ஆகியோரின் ஆதரவைக்கொண்டு
ஆட்சி அமைப்போம்” என ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் தேவகௌடா கூறியிருக்கிறார். 

கர்நாடகாவில் தேவகௌடாவின் ஜனதாதளம் (எஸ்), பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து
போட்டியிடுகின்றன. கடந்த 2013 தேர்தலில் 40 இடங்களைக் கைப்பற்றிய தேவகௌடாவின் கட்சி கர்நாடக அரசியலில்
’கிங் மேக்கராக’ உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் தமது கட்சித் தனிப்பெரும் கட்சியாக
வெற்றிபெறும் என்று தேவகௌடா கூறியிருக்கிறார். 2013 தேர்தலில் 48 இடங்களில் தமது கட்சி இரண்டாவது
இடத்தைப் பெற்றது என்றும் அதில் பெரும்பாலான தொகுதிகளில் 2000 முதல் 10000 வாக்குகள் வித்தியாசத்திலேயே
வெற்றி வாய்ப்பு தவறிப்போனது என்றும் இம்முறை பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணி அமைத்திருப்பதால் நிச்சயம்
அந்தத் தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்றும் தேவகௌடா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தேவகௌடா கர்நாடகாவில் உள்ள எண்ணிக்கை பலம் வாய்ந்த சாதிகளில் ஒன்றான ஒக்காளிகா சாதியைச் சேர்ந்தவர்.
கர்நாடகாவின் மக்கள் தொகையில் அது சுமார் 15 சதவீதம் உள்ளது. கர்நாடகா அரசியலில் ஒக்காளிகா சாதியினரின்
ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்தது. அந்த சாதியைச் சார்ந்தவர்கள் ஐந்து முறை முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.
கர்நாடகாவில் கட்சி அரசியலைவிட சாதி அரசியலின் செல்வாக்கே அதிகம் என்பதால் தேவகௌடா சொல்வதை
அலட்சியப்படுத்திவிட முடியாது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கர்நாடகாவின் மொத்த மக்கள் தொகை 6 கோடியே 11
லட்சமாகும், அதில் 1 கோடியே 5 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 44 லட்சம் பேர் பழங்குடி
இனத்தைச் சேர்ந்தவர்கள். எஸ்சி/எஸ்டி இரண்டு வகுப்புகளும் சேர்ந்து கர்நாடக மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில்
24 சதவீதம் உள்ளனர்.    

    

கர்நாடக மக்கள் தொகையில் தலித் வகுப்பினர் கணிசமாக இருந்தாலும் அவர்களுக்கென்று தனியே அரசியல் கட்சி
எதுவும் கர்நாடாகாவில் வலுவாக இல்லை. 1970 களின் பிற்பகுதியில் தீவிர சமுதாய இயக்கமாக உருவெடுத்த தலித்
சங்கர்ஷ சமிதி (டி.எஸ்.எஸ்) அதன்பின்னர் உருவான சமதா சைனிக் தள் (எஸ்.எஸ்.டி) ப்ரஜா விமோச்சன சாலுவாளி
(பி.வி.சி) முதலானவை பத்து இருபது ஆண்டுகளுக்குள்ளேயே பலவீனமடைந்து கரைந்துபோயின. தலித் மக்களில்
பெரும்பாலோர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியைத்தான் ஆதரித்து வந்துள்ளனர். தேவராஜ் அர்ஸ் அமைச்சரவையில்
பதவி வகித்த  பசவலிங்கப்பா ஒரு காங்கிரஸ்காரர் என்பதைவிட அம்பேத்கரின் மாணவராகவும், தலித்
தலைவராகவும்தான் அறியப்பட்டிருந்தார். 1973 ல் அவர் கன்னட இலக்கியம் குறித்து தெரிவித்த கருத்துக்காக அவரது
அமைச்சர் பதவி பாதியிலேயே பறிக்கப்பட்டதை தலித்துகள் மறந்துவிடவில்லை. 

மல்லிகார்ஜுன கார்கே போன்ற தலித் சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் இருந்த
போதிலும் அவர்களை முதல்வர் ஆக்குவதற்கு காங்கிரஸ் முன்வந்ததில்லை. கடந்த எட்டு ஆண்டுகளாக கர்நாடக மாநில
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் பரமேஷ்வரா கடந்த 2013 ல்
முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அந்த வாய்ப்பு
சித்தாரமையாவுக்குப் போய்விட்டது. அவர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டாரோ என்ற சந்தேகம் தலித்துகளிடையே
உள்ளது. இதெல்லாம் காங்கிரஸ் கட்சியின்மீதான தலித் மக்களின் பற்றை சற்றே தளர்த்தியுள்ளன. 

கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சி வலுவாக இல்லை. 1994ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும் அது ஒரு இடத்தை
வென்றது. அதன் பின்னர் அக்கட்சி எந்த வெற்றியையும் பெற்றதில்லை. 2013 தேர்தலில் அக்கட்சி 175 தொகுதிகளில்
போட்டியிட்டு 174 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. அந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வாங்கிய மொத்த
வாக்குகள் 2,84,768 மட்டுமே. பதிவான மொத்த வாக்குகளில் அது ஒரு சதவீதம் மட்டும்தான் என்ற போதிலும் பத்துக்கும்
மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தது. 

கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கி இவ்வளவு பலவீனமாக இருக்கும்போது எதனடிப்படையில் பகுஜன்
சமாஜ் கட்சியின் வாக்குகள் தமக்கு உதவும் என தேவெ கௌடா கூறுகிறார் என்பது ஆராய வேண்டிய ஒன்றாகும்.
கடந்தமுறை பகுஜன் சமாஜ் கட்சி வாங்கிய வாக்குகளால் 17 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வி
அடைந்திருக்கிறது. அந்தத் தொகுதிகளில் எல்லாம் இம்முறை அதே அளவு வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சி தனது
கூட்டணி கட்சிக்கு சேர்த்தால் அங்கெல்லாம் தேவ கௌடாவின் கட்சி எளிதாக வென்றுவிடும்.

கர்நாடகாவில் உள்ள எஸ்சி பிரிவில் 101 சாதிகள் உள்ளன. ஆனால் ஆதி கர்நாடகா, மாதிகா, பஞ்சாரா, போவி,
ஹொலயா, ஆதிதிராவிடா உள்ளிட்ட ஆறு சாதிகள் தான் எஸ்சி மக்கள் தொகையில் 85 சதவீதம் உள்ளனர். இந்த
சாதிகளில் ஆதி கர்நாடகா மற்றும் மாதிகா சாதியினரிடையே பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓரளவு ஆதரவு உள்ளது.
ஹொலயா சாதியில் 34 சதவீதம் பேர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களிலும் கணிசமானோர்
பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிகின்றனர். 

உத்தரப்பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் தனித்தே போட்டியிடுவது என்ற கொள்கையை இதுவரை கடைபிடித்து வந்த
மாயாவதி இந்த முறைதான் தேவெ கௌடாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இது பகுஜன் சமாஜ் கட்சி
ஆதரவாளர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சி இப்போது 18 இடங்களில் போட்டியிடுகிறது. 11  
தனித் தொகுதிகளிலும் 7 பொதுத்தொகுதிகளிலும் அது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பொதுத் தொகுதிகளில் 4 தொகுதிகளில் லிங்காயத்துகளும் மற்ற 3 தொகுதிகளில் மராத்தா, குருபா, முஸ்லிம் என தலா
ஒருவரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடகா தேர்தல் முடிவுகள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் ஆட்சி அமைத்தாலும் இம்முறை பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒரு சில எம்எல்ஏ க்களாவது கர்நாடக சட்டப்பேரவையில் இடம்பெறுவார்கள். அது கர்நாடகாவில் சுயேச்சையான தலித் அரசியல் மீண்டும்  முகிழ்க்க வழிகோலலாம். கர்நாடகாவில் கூட்டணி அமைப்பதில் கிடைக்கும் வெற்றி தமிழ்நாடு உள்ளிட்ட  பிற  மாநிலங்களிலும்கூட பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் உத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
 

Advertisement:
Related Tags : Bahujan samaj Party
Advertisement:
Advertisement:
[X] Close