Published : 03,Apr 2021 10:06 PM

பாஜகவின் 'டபுள் என்ஜின்' கோட்பாட்டை முறியடிக்குமா கேரளா, மேற்கு வங்க தேர்தல்கள்?!

Can-Bengal--Kerala-Polls-Stop-BJPs-Double-Engine

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நுழைந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட துடிக்கிறது பாஜக. அதில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றுவிட்டது. அதனால், நுழையவே முடியாது என்று கூறப்பட்ட மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் நுழைந்து ஆட்டம் காட்டி வருகிறது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் கடந்த நாடாளுமன்றத்தில் பாஜகவின் வளர்ச்சி என்பது அசுர வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இப்போது செல்லும் இடங்களிலெல்லாம் பாஜக 'டபுள் என்ஜின்' என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி வருகிறது. அதுகுறித்து சற்றே விரிவாக பார்ப்போம்.

கடந்த பிப்ரவரி 7-ம் தேதி மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் அரசு, மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்த முட்டுக்கட்டை போடுவதாக குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த மம்தா, அம்ஃபன் புயலுக்கான உரிய நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

பாஜகவை எதிர்த்து கேரளா, மேற்கு வங்கம் போராடுவது ஏன்?

மத்திய அரசின் சில திட்டங்களை அமல்படுத்துவதை இரண்டு மாநிலங்களும் எதிர்த்தே வருகின்றன. ஜி.எஸ்.டி இழப்பீடு, கொரோனா தொற்று பாதிப்புக்கு உரிய நிதியை விடுவிக்காதது, விவசாய சட்டங்கள், செஸ் வரி எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் மேற்கு வங்கத்தின் டி.எம்.சி மற்றும் கேரளாவில் இடதுசாரிகள் தொடர்ச்சியான கூட்டாட்சி பிரச்னைகளை எழுப்பி வருகின்றன.

பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு, மாநில - மத்திய அரசுகளுக்கிடையிலான கூட்டாட்சி உணர்வை ஊக்குவிக்கவில்லை என்று டி.எம்.சி மற்றும் இடதுசாரி (எல்.டி.எஃப்) மூத்த தலைவர்கள் கூறினாலும், இந்த மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்கள், 'டபுள் என்ஜின்' என்பது கூட்டாட்சித்துவத்தின் கொள்கைகளுக்குத் தடையாக இருக்காது. மாறாக, இது குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய - மாநில அரசுகள் ஒத்திசைந்து செயல்படுவதை உறுதி செய்யும் என்கின்றனர்.

கூட்டாட்சி பிரச்னை

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியைச் சேரந்த தலைவர்கள் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கொரோனா தொற்றை எதிர்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்குமாறு கடிதம் எழுதியிருந்தனர். அத்தியாவசிய நடவடிக்கைகள் தடைபட்ட இந்த நாள்களில் மாநிலத்தின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. கேரளா மற்றும் மேற்கு வங்க தேர்தல்களில் இந்த பிரச்னை பெரும் பங்கு வகிப்பதாக தலைவர்கள் கூறுகின்றனர்.

image

"மாநிலங்களின் உரிமைகள் எவ்வாறு மிதிக்கப்படுகின்றன, கேரளாவுக்கு மத்திய அரசுக்கான நிதி எவ்வாறு மறுக்கப்படுகிறது ஆகிய இரண்டையும் தேர்தல் பிரசாரங்களில் முக்கியமானவையாக முன்வைக்கிறோம். நிதிக்கான போராட்டம் இன்னும் முக்கியமான பிரச்னையாக இருக்கிறது'' என்று கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐஸக் தெரிவித்துள்ளார்.

மேலும், "நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக நாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாஜக எவ்வாறு முட்டுக்கட்டை போடுகிறது என்பது குறித்து மக்களிடம் விளக்கி வருகிறோம். இதுதான் தேர்தல் பிரசாரத்தின் முக்கியமான கருப்பொருள். இந்த கொள்கைகள் தொடர விரும்பினால் நீங்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று நாங்கள் மக்களிடம் கோரி வருகிறோம்'' என்று அவர் கூறினார்.

ஜிஎஸ்டி இழப்பீடு தாமதம் தொடர்பாக 2020-ம் ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் முரண்பட்டு நின்றன. திரிணாமூல் காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, "ஜி.எஸ்.டி என்பது நாட்டில் கூட்டாட்சி கொள்கையின் ஒரு 'பிரகாசமான எடுத்துக்காட்டு', இதற்கு மத்திய மற்றும் மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து இந்த பிரச்னைகளுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் மீது மத்திய அரசின் குற்றச்சாட்டு!

பிரதமர் - கிசான் சம்மன் நிதி மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அக்கறை காட்டுவதில்லை என்பது மத்திய பாஜக அரசின் முக்கியமான குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறது.

அது என்ன டபுள் என்ஜின் வளர்ச்சி?

கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த மத்திய பாஜக அரசு 'டபுள் என்ஜின்' என்ற விஷயத்தை முன்வைத்து வருகிறது. அது என்ன டபுள் என்ஜின் வளர்ச்சி என்றால், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான் இதன் சாரம்சம். 2020 பீகார் தேர்தல்களில் மட்டுமல்லாமல், அது ஆட்சியில் இருக்கும் அசாம் உள்ளிட்ட அனைத்து முக்கிய மாநிலத் தேர்தல்களிலும் டபுள் என்ஜின் கான்சப்டை வலியுறுத்தி வருகிறது.

image

கடந்த வாரம், அசாமில் பிஹ்புரியாவில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் 'டபுள் என்ஜின்' வளர்ச்சியின் அவசியம் குறித்து மோடி பேசினார். அதேநேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதையே வலியுறுத்தி பேசி வருகிறார்.

``டபுள் என்ஜின் என்ற முழுக்கமே முழுக்க முழுக்க கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இதன்மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? நாட்டின் பன்முகத்தன்மயை சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம்'' என்கிறார் முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா.

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளரும், கேரளாவின் மூத்த தலைவருமான டாம் வடக்கன், 'டபுள் என்ஜின் வளர்ச்சி' என்பது மக்களுக்கு சேவைகளை எளிதாக்குவதையும், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த உதவுவதையும் குறிக்கிறது என்கிறார்.

"மக்களுக்கு உதவுகிற அல்லது அரசாங்கத்திடமிருந்து அவர்களின் உண்மையான உரிமைகளைப் பெற மக்களுக்கு உதவும் எதுவும் நல்லது. எனவே, அந்த அடிப்படையில் மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கான உரிமையை உடனே பெற்று தர இந்த டபுள் என்ஜின் முறை உதவும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

கட்டுரை உறுதுணை:The Quint

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்