யார் சாமி நீ? ஒரு ரன் கூட கொடுக்காமல் 7 விக்கெட்டுகள்! உலகசாதனை படைத்த இந்தோனேசியா பவுலர்!
17 வயது இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனையான ரோமலியா ரோமலியா என்பவர், தன்னுடைய அறிமுகப்போட்டியிலேயே யாரும் படைக்காத ஒரு மிகப்பிரமாண்ட சாதைனையை படைத்து அசத்தியுள்ளார்.
மங்கோலியா மற்றும் இந்தோனேசியா அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டி, உதயனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசியா அணி 151 ரன்கள் எடுத்தது. அதற்கு பிறகு விளையாடிய மங்கோலியா அணி இந்தோனேசியா ஆஃப் ஸ்பின்னர் ரோமலியா வீசிய அபாரமான பந்துவீச்சால், 24 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 127 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
வெறும் 3.2 ஓவர்களை மட்டுமே வீசிய ரோமலியா 0 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனையை படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பதிவான சிறந்த பந்துவீச்சு..
ஆண்கள், பெண்கள் என இரண்டுவிதமான சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்த ரோமலியா, ஒரு அசாத்தியமான உலக சாதனையால் கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
ஒரு ரன்கூட விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரோமலியா, அதேநேரத்தில் அறிமுக போட்டியில் ஒரு வீரர் பதிவுசெய்த மிகச்சிறந்த பந்துவீச்சையும் கொண்டு இரண்டு உலகசாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சு (ஆண்கள் மற்றும் பெண்கள்):
ரோமலியா ரோமலியா (இந்தோனேசியா பெண்கள்) / 3.2-3-0-7 vs மங்கோலியா (2024)
ரெடெரிக்யூ ஓவர்டிஜ்க் (நெதர்லாந்து பெண்கள்) / 4-2-3-7 vs பிரான்சு (2021)
அலிசன் ஸ்டாக்ஸ் (அர்ஜென்டினா பெண்கள்) / 3.4-0-3-7 vs பெரு (2022)
ஸ்யாஷ்ருல் எசத் (மலேசியா ஆண்கள்) / 4-1-8-7 vs சீனா (2023)
அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சு:
ரோமலியா ரோமலியா (இந்தோனேசியா பெண்கள்) / 3.2-3-0-7 vs மங்கோலியா (2024)
அஞ்சலி சந்த் (நேபாளம் பெண்கள்) / 2.1-2-0-6 vs மாலத்தீவு (2019)