[X] Close

2024-ல் மோடி அரசை வீழ்த்த ராகுலிடம் ஸ்டாலின் பகிர்ந்த வியூகம்... எந்த அளவுக்கு சாத்தியம்?

சிறப்புக் களம்,அலசல்

MK-Stalin-shares-a-strategy-to-defeat-modi-government-in-2024--Explained

'மத்தியில் தேசிய கட்சிகளை இணைத்து ஒற்றுமையுடன் செயல்பட்டால், மோடி தலைமையிலான அரசை வீழ்த்த முடியும்' என ராகுல் காந்தி உடனான தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். இதற்கு சாத்தியம் இருக்கிறதா? காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைய வாய்ப்பு இருக்கிறது? - சற்றே விரிவாக அலசுவோம்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அதற்கு முந்தைய காங்கிரஸ் அரசின் மீதான வெறுப்பின் காரணமாக பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கினர். ஆனால், அதுவே கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பெரும் வெற்றிக்கு கட்சியின் அசாத்திய உழைப்பு ஒருபுறம் காரணமென்றால், மற்றொருபுறம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பதை தெளிவாகக் கூறலாம்.

ஏனென்றால், எதிர்க்கட்சிகளிடையே பிரதமர் வேட்பாளர் யார் என்பதில்தான் பெரும் சலசலப்பு இருந்து வந்தது. திமுக தலைவர் ஸ்டாலினை தவிர நாட்டிலுள்ள மற்ற முக்கிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னெடுக்கவில்லை.


Advertisement

ராகுல் காந்தி என்று இல்லாமல் வேறு யாரையுமே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. இப்படியான ஒற்றுமையின்மையைதான் கடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியாக அறுவடை செய்தனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த படுதோல்விக்குப் பிறகு, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தங்களது கடந்த கால கசப்புகளை மறந்து ஓரளவிற்கு ஒன்றிணைய முயற்சிப்பதை பார்க்க முடிகிறது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இல்லாத சூழலிலும், மாபெரும் அசுர வளர்ச்சியை அக்கட்சி பெற்றதற்கு காரணம், மாநிலத்தில் அவர்கள் அமைத்த கூட்டணியே.


Advertisement

image

தற்போது நடைபெற்று வரக்கூடிய மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் நீண்ட நாள் எதிரியாக இருந்தாலும்கூட பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக காஸ்கிரஸ் - இடதுசாரிகள் ஆகியவை ஒன்றிணைந்து இருக்கின்றன. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் 7 கட்சிகள் மெகா கூட்டணியில் உள்ளது.

தமிழகத்திலும் திமுக தலைமையில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற காரணத்திற்காக பெரும்பாலான கட்சிகள் கூட்டணி சங்கமத்தில் கலந்திருக்கின்றன.

ஆனால், இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம், காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி பூசல் ஒவ்வொரு மாநிலத்திலும் அது கூட்டணி அமைத்துள்ள மற்ற கட்சிகளுக்கு பாதகமாகவே சென்றிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைமை இல்லாதது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரே கட்சி நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபடாமல் இருப்பது ஆகியவையெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தலைமையின் கீழ் ஒன்று இணைவதற்கு மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுவதற்கான காரணமாக இருக்கிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கும், கர்நாடகாவின் குமாரசாமிக்கும் இதுதான் நடந்தது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை இழந்தது, ராஜஸ்தானில் முதல்வர் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கு நடக்கும் பனி போர், புதுச்சேரியில் உள்கட்சி பூசலால் ஆட்சியை இழந்தது என காங்கிரஸ் கட்சி மீதான மற்ற கட்சிகளின் நம்பிகையை சிதைப்பதாக உள்ளது.

இந்த தயக்கத்தின் காரணமாக காங்கிரஸ் கட்சியின் தலைமையின் கீழ் வருவதை தவிர்க்கும் கட்சிகளாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், காஷ்மீரின் பருக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை உள்ளது.

எனவே, காங்கிரஸ் கட்சி முதலில் தங்களது கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளை எல்லாம் சரிசெய்து, தங்களது கட்சியை முதலில் வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டும்தான் மற்ற தேசிய கட்சிகளுக்கும் மாநில கட்சிகளுக்கும் காங்கிரஸின்மீது நம்பிக்கை வரும். அதன்பிறகுதான் அதன் தலைமையில் பிற கட்சிகள் ஒன்றிணைய முன்வருவார்கள். இல்லை என்றால், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியில் பங்கு எடுக்கும் நிலை மட்டும்தான் கிடைக்கும்.

image

காங்கிரஸ் கட்சி தங்களை நிரூபிப்பதற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு அடுத்த ஆண்டு அவர்களுக்கு காத்திருக்கிறது. அதுதான் உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல். மொத்தம் 403 இடங்களைக் கொண்ட அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களைப் பெற்று தங்களது வெற்றியை நிரூபித்துவிட்டால், அதன் பிறகு மற்ற மாநிலங்களில் பிற கட்சியினரின் நம்பிக்கை பெறுவது எளிதாகிவிடும். உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகிய இருவரும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் முனைப்பில்தான் இருக்கின்றனர். இதனை சரியாக பயன்படுத்தி, சரியான தலைமையை உருவாக்கி, அதன் மூலம் காங்கிரஸ் கட்சி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரகாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கட்டாயம் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலைமைதான் இருக்கிறது.

இந்த இரண்டு வெற்றிகளும்தான் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையின் கீழ் பிற கட்சிகள் வருவதை உறுதி செய்யும். எனவே அடுத்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா, சாவா என்ற ஆண்டுதான்.

- நிரஞ்சன் குமார்


Advertisement

Advertisement
[X] Close