[X] Close

ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை

குற்றம்,சிறப்புக் களம்

Pocso-act-and-Bombay-HC-controversial-Judgements

2012-ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நடைபெற்ற நிர்பயா பாலியல் வன்முறை சம்பவம்தான் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து பெரிய அளவில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. பெரும்பாலான மக்கள் இந்தப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வீதிகளில் திரண்டனர். ஆகவே அரசும் சட்டரீதியான மாற்றங்களை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக 18 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்க மிகவும் கடுமையாக்கப்பட்டது 'போக்சோ' சட்டம்.


Advertisement

வலுவான இந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும், பல மாநிலங்களிலும் குழந்தைளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு பிரதான காரணம், இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்னும் வளரவில்லை. இந்தச் சட்டம் எந்தளவுக்கு பாதுகாப்பானது? இதிலுள்ள ஷரத்துக்கள் என்ன?

image


Advertisement

* பலவந்தமான பாலியல் தாக்குதல் செய்வது (Penetrative sexual Assault).
* எல்லைமீறிய பலவந்தமான பாலியல் தாக்குதல் செய்வது (Aggravated penetrative sexual assault)
* பாலியல் ரீதியான தாக்குதல் (Sexual Assault)
* எல்லைமீறிய பாலியல் தாக்குதல் (Aggravated Sexual Assault)
* பாலியல் தொந்தரவு (Sexual Harassment)
* குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் எடுத்தல்

ஆகிய ஆறு வகை பாலியல் குற்றங்கள் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றன.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் குறைந்தபட்ச தண்டனையே 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழிவகுக்கிறது இந்த சட்டம். 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வழிமுறை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டது.


Advertisement

கடந்த 2016-ஆம் ஆண்டு மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் அதேபகுதியைச் சேர்ந்த 35 வயதான சதீஷ் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அந்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் அவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து குற்றவாளி சதீஷ் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கலேனிவாலா கடந்த 19-ஆம் தேதி தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.

image

குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என தீர்ப்பளித்தார். மேலும், குற்றவாளிக்கு ஐபிசி 354-வது பிரிவின் கீழ் ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பு வழங்கினார். பாலியல் நோக்கத்தோடு ஆடைகளின்றி சிறுமியின் உடலை தொட்டாலோ சீண்டினாலோ போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கலாம் என அவர்  கூறினார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய உரிமைகள் குழந்தைகள் பாதுகாப்பு, தேசிய மகளிர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ் போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் கொண்ட மூன்று பேர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இந்த விவகாரம் குறித்து முறையிட்டார். மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாகவும், எதிர்காலத்தில் பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்திடும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இதுபற்றி தனியாக வழக்குப் பதிவு செய்ய அனுமதித்தார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனையைக் குறைத்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்புக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு குறித்து மகாராஷ்டிரா அரசும் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பும் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டார்.

சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என்ற மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சமூக மற்றும் குழந்தை நல ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் ஓவியா கூறுகையில், "நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் நோக்கத்தோடு கையை காட்டினாலோ, தொட்டாலோ, பேசினாலோ, தொட்டாலோ குற்றம். அதுமட்டுமில்லாமல் ஒருவரை தொட சொல்வதும் குற்றம்தான். இது ஒரு செயற்கையான விளக்கத்தை கொடுத்திருப்பது போலத்தான் தெரிகிறது.

குற்றம் நடைபெற்றதை நீதிமன்றம் மறுக்கவில்லை. ஆனால் தண்டனையை குறைக்க போக்சோ சட்டத்திற்கு புது விளக்கத்தை கூறியிருக்கிறார். சட்டப்புத்தகத்தில் தொடுவது என்று மட்டும்தான் உள்ளது. ஆடையோடு தொடுவது, ஆடையில்லாமல் தொடுவது என்று சட்டப்புத்தகத்தில் இல்லை.

போக்சோ உள்ளிட்ட பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்துவதில் நமது நாடு ஏற்கெனவே பலகீனமாக உள்ளது. மேலும், புகார் அளிக்கப்பட்ட குற்றங்களில் பெரும்பாலானவைகளுக்கு தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. இந்த நேரத்தில் இப்படி விஷயத்தை திணித்தால் ஏற்கெனவே கிடைத்துக்கொண்டிருக்கும் சொற்ப நீதிகூட கிடைக்காமல் போகக்கூடிய அபாயம் இருக்கிறது.

இதுபோன்ற விளக்கம் மிகவும் மோசமான விஷயம். குழந்தைகளுக்கான பாதுகாப்பை ஒரு தேசம் தர வேண்டும். இதன் அடிப்படையில் உருவான சட்டம்தான் போக்சோ. ஆனால் இந்த சட்டத்தை வைத்து குற்றவாளிகளை பாதுகாக்க வழிவகுக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

image

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “பெண் குழந்தைகளிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபடுபவர்களை வன்மையாக கண்டிக்க வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். சட்டப்படி தூக்கு தண்டனை கொடுத்தால் கூட தவறில்லை. இதுபோன்ற தீர்ப்பை தந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசாங்கமா அது? பள்ளிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆண் குழந்தைகளை வளர்க்கும்போதே ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என சொல்லித்தர வேண்டும். இப்போது இருக்கும் சட்டத்தால் இதை தடுக்க முடியாது. இன்னும் கடுமையான சட்டத்தை கொண்டுவரவேண்டும். வீட்டில் இருந்துதான் நல்ல பழக்க வழக்கங்களை கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close