Published : 21,Nov 2020 02:26 PM
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: அதீத கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவானதால் தமிழகத்தில் பல இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீரவமடைந்துள்ளது. வளிமண்டல் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் குளம், குட்டை, ஊரணி, கண்மாய், ஏரி ஆகியவை நிறைந்துள்ளது. இவைகளை மாவட்டம் நிர்வாகம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது.
மேலும் மழை வெள்ளத்தால் ஏற்படும் பேரிடர்களில் இருந்து மக்களை காப்பாற்ற பல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, முன்னதாக இன்றே தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.
புதிதாக உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையை நோக்கி செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 23, 24, 25 ஆகிய நாட்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும். அதேபோல் கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் காரைக்காலில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய புயல்சின்னம் காரணமாக இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.