Published : 12,Nov 2020 02:31 PM

"போனஸும் இல்லை, வேலையும் இல்லை..!" - துயரம் பகிரும் சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள்

No-bonus-no-job-Sivakasi-fire-cracker-workers

"விடிந்தால் தீபாவளி... சம்பளமும் இல்லை... போனஸும் இல்லை... வேலையும் இல்லை என்ற நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறோம்" என்று தங்கள் அவலநிலையை ஆதங்கத்துடன் பகிர்கிறார்கள் பட்டாசுத் தொழிலாளர்கள். அவர்களின் நிலையை அறிய சிவகாசிக்குப் பயணித்தோம். அதன் முதல் பகுதி இது... 

image

“மகிழ்ச்சியைக் கொண்டாட வெடிக்கப்படும் பட்டாசுகளால் நோயும் உயிரிழப்பும் ஏற்படக்கூடாது. வேலை, பொருளாதார இழப்பெல்லாம் வந்தாலும், அவற்றைக் கருத்தில்கொள்ள முடியாது. மாறாக, மக்களுடைய உடல்நலமும், சுற்றுச்சூழலும் மிகவும் முக்கியம். அனைவரும் சுத்தமான காற்றை சுவாசிக்க உரிமை உண்டு' என பட்டாசு விற்பனை தொடர்பான வழக்கில் பசுமை தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கொரோனா நோய் பரவலை காரணம் காட்டி ஒடிசா, கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடையும், பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில், தீபாவளி பண்டிகையன்று இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 'டில்லி, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் முக்கிய நகரங்களில், 23 நாட்களுக்கு, அனைத்து வகை பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது' என, தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி, தூத்துக்குடி நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளன.

இதனிடையே, பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பட்டாசுக்கான தடையை நீக்க வேண்டும் என்று என்று ஒடிசா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் கோரியிருந்தார்.

இந்தப் பின்னணியில், சிவகாசியில் இப்போது பட்டாசு விற்பனை எப்படி இருக்கிறது, தொழிலாளர்களின் வாழ்வாதார நிலை என்ன என்பதை அறிய சிவகாசிக்கு நேரடியாக ஒருநாள் விசிட் அடித்தோம்.

image

 சிவகாசிக்கு பஸ்ஸில் பயணப்பட்ட நாம், ராஜரத்தினம் நகராட்சி பேருந்து நிலையத்தில் இறங்கியதுதான் தாமதம், "பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கு... தடையை நீக்கு..." என்று கோரி போராட்டம் என்ற சப்தம் வந்த திசையை நோக்கி திரும்பிப் பாத்தோம். 8 லட்சம் பட்டாசுத் தொழிலாளர்களின் வேலையை பறிக்கின்ற பட்டாசுத் தடையை நீக்க வலியுறுத்தி, கையில் செங்கொடியை ஏந்தி சி.ஐ.டி.யு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தது. 8 லட்சம் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற கவன ஈர்ப்புப் போராட்டத்தில் 20 பேர் மட்டுமே கலந்துகொண்டதையும் கவனிக்க முடிந்தது.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாண்டினிடம் பேசினோம். "தீபாவளிக்கு இன்னும் இரண்டு தினங்கள் இருக்கிறது. தீபாவளி என்றாலே இனிப்பு, புத்தாடை பட்டாசு என்று மகிழ்ச்சியோடு கொண்டாடக்கூடிய இந்தத் தருணத்தில், சிவகாசி மற்றும் சிவகாசியை சுற்றி இருக்கக்கூடிய 1700-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி போன்ற மாநிலங்களில் விற்பதற்கும் வெடிப்பதற்கும் விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்.

அதேபோல, ஆளும் மத்திய - மாநில அரசுகள் இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்களில் இந்தப் பட்டாசுத் தொழிலை மட்டுமே நமபியிருக்கும் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், பட்டாசு தொழிலையும் பாதுகாக்க முயற்சி செய்யவேண்டும்.

image

200-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய நகரங்களில் பட்டாசு வெடிக்க பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது. இந்த தடையை உடனடியாக நீக்க வேண்டுமென்று பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கிறோம். எனவே, மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் கடந்த காலங்களில் இந்தத் தொழிலை பாதுகாக்க சி.ஐ.டி.யு தொழிற்சங்கமும், பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கமும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் உற்பத்தியாளர்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தித்தான் இந்த தொழிலை பாதுகாத்திருக்கோம். அதுபோன்ற போராட்டத்தை வரும் காலங்களிலும் முன்னெடுத்துச் செல்வோம்" என்றார் ஆவேசமாக.

அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மகாலெட்சுமி, "பசுமைத் தீர்பாயத்தின் இந்த அறிவிப்பால் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விடிந்தால் தீபாவளி... சம்பளமும் இல்லை... போனஸும் இல்லை... வேலையும் இல்லை என்ற நெருக்கடியில் தொழிலாளர்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

image

சுற்றுச்சூழல் மாசுக்கு பட்டாசு வெடிப்பது மட்டும் காரணமல்ல; ஆனால், மத்திய அரசு பட்டாசால்தான் மாசு ஏற்படுகிறது என்று கூறுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இது அபத்தமானது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பட்டாசுமேல் வைப்பதை மத்திய, மாநில அரசுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பசுமை தீர்பாயத்தின் தீர்ப்பை மறுபரிசீலினைக்கு உட்படுத்தி உடனடியாக தடையை நீக்கி 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்" என்றார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்