
ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் நேற்று இரவு முதல் ஒரு கடிதம் பரவி வருகிறது. அதில் ரஜினியின் உடல்நலக் குறைவு குறித்தும், தற்போதைய கொரோனா காலத்தில் ரஜினி மக்களை சந்தித்து அரசியல் பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், அரசியல் கட்சி தொடங்கும் முன்பே ரஜினி அதனை கைவிட திட்டமிட்டுள்ளது போன்ற கருத்து பரவியது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு அரசியல் விமர்சகர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அரசியலுக்கு வருவதற்கு ரஜினிக்கு விருப்பம் இல்லை எனவும் அதிலிருந்து நழுவுவதற்கே முற்பட்டு வருகிறார் எனவும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.