Published : 03,Sep 2020 08:13 AM
கேரளா:கடனை கட்ட முடியாததால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பய்யாவூர் டவுனை சேர்ந்தவர் 32 வயதான ஸ்வப்னா.
அதே ஊரில் சொந்தமாக துணிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரது கணவர் இஸ்ரேலில் பணிபுரிந்து வரும் சூழலில் பதினொன்று மற்றும் இரண்டரை வயதான தன் பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன் குழந்தைகள் இருவருக்கும் ஐஸ்க்ரீமில் எலி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை ஸ்வப்னாவும் சாப்பிட்டுள்ளார்.
அடுத்த சில மணி நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூவரும் கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளள்னர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் ஸ்வப்னாவும் அவரது இளைய மகளும் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரது மூத்த மகள் மட்டும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“கொரோனா ஊரடங்கினால் பிசினஸ் ஸ்வப்னாவுக்கு கைகொடுக்காததால் வாங்கிய கடனுக்கான தவணை தொகையை கட்ட முடியாமல் நிதி சிக்கலில் தவித்து வந்துள்ளார் என்பது எங்களது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட பிறகே தற்கொலைக்கான காரணத்தை சொல்ல முடியும்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)