Published : 08,Aug 2020 08:25 PM
மேலூர் அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் : வெளியான சிசிடிவி காட்சிகள்

மேலூர் அருகே நேற்று கனரா வங்கி ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியில் கனரா வங்கி செயல்பட்டு வருகின்றது, இந்த வங்கியின் ஏடிஎம் மையம் நான்கு வழிச்சாலையின் மறுபுறத்தில் செயல்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்தில் பொறுத்தி இருந்த மூன்று கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி, ஏடிஎம் இயந்திரத்தை சுத்தியல் மற்றும் இரும்பு கம்பியால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர், இந்நிலையில் மக்கள் நடமாட்டம் வரவே, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் மர்மநபர்கள் அங்கிருந்த தப்பித்துள்ளனர். இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் தப்பியது.
இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஏடிஎம் மையத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, கொள்ளையடிக்க வந்த மர்மநபர்களில் ஒருவன், இயந்திரத்தை உடைப்பதற்கு முன் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தும் காட்சியினை வெளியிட்டுள்ளனர். தற்போது இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்