சிவகாசி பட்டாசுகள்
சிவகாசி பட்டாசுகள்PT

“பாதுகாப்பே கிடையாதா?” - சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் கடந்த 50 மாதங்களில் 93 பேர் மரணம்!

சிவகாசி பட்டாசு உற்பத்தியில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்கள் - மருதுபாண்டி, மணிகண்டன்

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் கடந்த 50 மாதங்களில் 93 பேர் உயிரிழந்துள்ளனர். வெயில் தகிக்கும் நேரத்தில், பாஸ்பரஸ் நடுவே உழைக்கும் ஊழியர்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன, உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

தேனீக்கும், எறும்புக்கும் சவால் விடுக்கும் சுறுசுறுப்புடன் இயங்கும் பட்டாசு தொழிலாளர்களின் வேகம்தான், விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு குட்டி ஜப்பான் என்ற பெயரை பெற்றுத்தந்தது.

1960-களில் தொடங்கப்பட்ட பட்டாசுத் தொழில், உழைப்பாளிகளின் தியாகத்தால், தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்களிலும், பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தி, குடிசை தொழிலாக இன்றளவும் நடந்து வருகிறது.

சிவகாசி பட்டாசுகள்
திருப்பூர் | பட்டியலின மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்!

தீப்பெட்டி, அச்சகம், பட்டாசு தயாரிப்பு என பம்பரமாக சுழல்கிறது சிவகாசி. இந்தியாவின் 80 சதவிகித தீப்பெட்டிகளை உற்பத்தி செய்யும் சிவகாசி, நாட்டிற்குத் தேவையான பட்டாசுகளில் 90 சதவிகிதத்தையும் சளைக்காமல் தருகிறது. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நகரத்தின் தட்பவெப்ப சூழல்தான் பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்திக்கு உகந்தது. ஆனால் அதுவே பெரும் துயரங்களுக்கு காரணம் என்றால் நம்ப முடிகிறதா?.

பழைய காகிதம், கந்தகம், வெடி உப்பு, அலுமினியம், சணல், அட்டைப்பெட்டி ஆகிய அனைத்தும் நெருப்புக்கு விருப்பமானவை. வேதிப் பொருட்களைக் கலந்து, காகித சுருளுக்குள் நிரப்பி, திரி இணைத்து, பூச்சரம் போல் சரவெடி கட்டுவதில் சிவகாசியை மிஞ்ச முடியாது.

நட்சத்திரங்களை ஆச்சரியப்படுத்தும், வாண வேடிக்கையும் சிவகாசியின் சிலிர்ப்பூட்டும் உற்பத்திதான். ஆனால், கந்தகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட வெடித்துச் சிதறும் நெருப்புக்கு நெருக்கமான ரசாயனங்களின் நடுவே உழைக்கும் மக்களின் உயிர், திடீரென ஏற்படும் விபத்தால், வெடியோடு சிதறி கருகி விடுகிறது.

ஆண்டுதோறும் பட்டாசு உற்பத்தி கிடங்குகளின் விபத்து அதிகரிக்கும் நிலையில், இதுவரை நடந்த விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்டவை குறித்து, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் புதிய தலைமுறை தரப்பில் விளக்கம் கேட்டு பெறப்பட்டது.

அதில்,

விருதுநகர் மாவட்டத்தில் 1,087 பட்டாசு ஆலைகள் உள்ளதாக கூறியுள்ள ஆட்சியர், 2,963 மொத்தம் மற்றும் சில்லறை பட்டாசு கடைகள் செயல்படுவதாக விளக்கம் அளித்தார். 2020 ஜனவரி முதல் 2024 பிப்ரவரி வரையான 50 மாதங்களில் 83 ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், 4 கடைகள் எரிந்துள்ளதாகவும் கூறியுள்ள தீயணைப்புத்துறை, இந்தக் காலத்தில் 93 பேர் உடல்கருகி உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு, மத்திய, மாநில அரசுகளின் நிவாரணங்கள் போய் சேர்ந்துள்ளதா, விதி மீறிய எத்தனை ஆலைகள் மூடப்பட்டன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த மாவட்ட நிர்வாகம், அந்த தகவல்களை அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் பணி இருப்பதாக காரணம்காட்டி ஆய்வு மேற்கொள்ளாமல் இருந்த அதிகாரிகள், தேர்தல் முடிந்தபின்னும் சாக்குபோக்குகளை கூறி தொழிலாளர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என சமூகஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிக்கலாம் - கோடை விடுமுறையில் சம்மர் கேம்ப்கள் பாதுகாப்பானவையா? குழந்தைகள் நல ஆர்வலர்கள் சொல்வதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com