விவிபேட் வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! முக்கிய அம்சங்கள் இதோ...
மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா நடக்கும் இந்தியாவில், பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையுடன், விவிபேட் இயந்திர ஒப்புகைச் சீட்டை வைத்து, 100 சதவிகித ஆய்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் தொடர்பான நீதிபதிகளின் 5 கேள்விக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள நிரல்தகவல்களை மாற்ற இயலாது என்றது.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சிப்களை உற்பத்தி செய்த நிறுவனம், அதை மீண்டும் பயன்படுத்த முடியும் என ஆர்டிஐ-க்கு தகவலளித்துள்ளது முரணாக உள்ளது என வாதிட்டார்.
அப்போது தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றது. தங்களால் தேர்தலை கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியது. அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் கிடைத்துள்ளதாக கூறிய வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்பில் இருக்கும் சில முக்கிய அம்சங்கள், இங்கே...
“இவிஎம், விவிபேட் தொழில்நுட்பம் வழிமுறைகளை குறித்து விரிவான விசாரணையும், ஆலோசனையும் நடத்தினோம். இவிஎம், விவிபேட் கருவியின் நம்பகத்தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம்” - நீதிபதிகள்
இவிஎம்-ல் கட்சி சின்னத்துடன் பார் கோர்டு பொருத்துவது குறித்து ஆராய நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை.
இவிஎம் வாக்குகளை விவிபேட் ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு.
மீண்டும் பழைய வாக்குசீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகத்தது உச்சநீதிமன்றம்.
வாக்குப்பதிவில் குளறுபடி என சொல்லி யாராவது அதை சரிபார்க்க விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரம் தவறாக செயல்பட்டது கண்டறியப்பட்டால் கட்டணம் திருப்பித் தரப்படும்.
தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும்
முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்கள் இவிஎம்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் விரும்பினால் இவிஎம்-ல் உள்ள கண்ட்ரோலரை ஆய்வு செய்யலாம்.