மணல்குவாரி முறைகேடு | 5 ஆட்சியர்கள் ED விசாரணைக்கு ஆஜர்... சம்பவத்தின் பின்னணி என்ன? முழு விவரம்!

மணல்குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர்கள் அனைவரும் சென்னை அமலாக்காத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராகினர். இந்நேரத்தில் இச்சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை இங்கே காணலாம்...
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான 5 ஆட்சியர்கள்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான 5 ஆட்சியர்கள்புதிய தலைமுறை

செய்தியாளர் - அன்பரசன்

மணல் கொள்ளை விவகாரம்: 2023-ல் நடந்தது என்ன?

தமிழகத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவது தொடர்பாக பல்வேறு வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 2023 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மணல் குவாரிகள், குவாரி அதிபர்களுக்கு தொடர்புடைய இடங்கள் என 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

மணல் கொள்ளை
மணல் கொள்ளைPT

அந்தச் சோதனையில் ரூ.2.33 கோடி பணம், 56 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பல கோடி மதிப்பு கொண்ட அசையா சொத்துகள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தனர். மேலும், 13 கோடி ரூபாய் இருப்பில் உள்ள 30 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!

இதன் தொடர்ச்சியாக மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள் சண்முக பாண்டியன், கருப்பையா, ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் இவர்கள் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதற்காக ஒரு சிண்டிகேட் போன்ற குழுவை அமைத்துக் கொண்டு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டதும், சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பித்து இருப்பதும் தெரியவந்தது.

மேலும், அரசு ஆவணங்களின் பதிவு செய்யப்பட்ட அளவைவிட அதிகப்படியான மணல் அள்ளப்பட்டு இருப்பதும் இதனால் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்புகள் ஏற்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவுக்கு கடந்த ஆண்டு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். முத்தையாவிடம் மேற்கொண்ட விசாரணையில் பல முக்கிய தகவல்களை பெற்றனர்.

முத்தையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக சட்ட விரோதமாக மணற்குவாரிகளில் மணல் அள்ளும் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை 130 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.

இதில் 29 மணல் அள்ளும் இயந்திரங்கள் உட்பட 128 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மணல் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்கில் இருந்த 2.25 கோடி ரூபாய் முடக்கம் செய்யப்பட்டன.

மணல்குவாரி, அமலாக்கத்துறை
மணல்குவாரி, அமலாக்கத்துறைpt web

5 ஆட்சியர்களுக்கு சம்மன்...

இந்த நிலையில் ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில், “சட்டவிரோதமாக மணல் அள்ளி தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

குவாரிகளில் மணல் அள்ளுவதற்கு உரிய அனுமதியை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்தான் கொடுக்க வேண்டும். குறிப்பாக

  • மணற்குவாரி எத்தனை ஹெக்டேர் பரப்பளவில் இருக்கப்பட வேண்டும்?

  • ஒரு நாளைக்கு எத்தனை டன் மணல் அள்ளப்பட வேண்டும்?

  • எத்தனை லோடுகள் செல்ல வேண்டும்?

  • அரசு ஆவணங்களில் அனுமதி வழங்கப்பட்ட அளவில் தான் மணல் எடுக்கப்படுகிறதா?

  • எத்தனை மாதங்கள் அல்லது வருடங்கள் மணல் குவாரியில் மணல் எடுக்க வேண்டும்

- என்று ஆய்ந்து அனுமதி வழங்கும் பிரசீடிங் அத்தாரிட்டி ஆபிஸராக செயல்பட்டு வருவது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்தான்.

எனவே, மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிந்துதான் இந்த மாபெரும் மணற்குவாரி மோசடி நடந்ததா?
அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை
அமலாக்கத்துறைமுகநூல்

இந்த மோசடிக்கு பின்னணியில் எந்தெந்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதை கண்டறியவும் மணல் அள்ளப்பட்ட விவரங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு,

கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பலமுறை அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அளித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்பது தொடர்பாகவும் சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்றம் Vs உச்சநீதிமன்றம்!

இதில் அப்போது வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த குமரவேல் பாண்டியன், தஞ்சை மாவட்ட ஆட்சியராக அப்போது இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி ஸ்வர்ணா, கரூர் மாவட்டத்தில் அப்போது ஆட்சியராக இருந்த பிரபு சங்கர், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகிய ஐந்து ஆட்சியர்களும் ஆஜராகாமல் இருந்தனர்.

5 மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராகாமல் இருக்க தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், “வழக்கு தொடர்ந்து நடைபெறலாம். ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரணை நடத்தக் கூடாது” என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சம்பந்தப்பட்ட ஐந்து ஆட்சியர்கள்
சம்பந்தப்பட்ட ஐந்து ஆட்சியர்கள்

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “மணல் குவாரி முறைகேட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தலாம்” என கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்து உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது.

மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்...

இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் “கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்று (25ஆம் தேதி) சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மணல் குவாரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என அவர்களுக்கு சம்மன் அளித்தனர்.

அந்த வகையில் தற்போது

  • வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் சுப்புலட்சுமி IAS,

  • தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் தீபக் ஜேக்கப் IAS,

  • கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் தங்கவேலு IAS,

  • (கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை) அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் ஆனி மேரி ஸ்வர்ணா IAS,

  • (கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை) திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் பிரதீப் குமார் IAS

- ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு இன்று காலை சரியாக 10:30 மணி அளவில் நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

ஆவணங்களோடு ஆஜராக வந்த ஆட்சியர்கள்!

பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் குஷ்குமார் சாலை பகுதியில் அமைந்துள்ள மண்டல அலுவலகத்தில் ஆஜராகமாறு கூறியதன் அடிப்படையில் ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் குஷ்குமார் சாலை பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் சரியாக 11 மணிக்கு ஆஜர் ஆகினர்.

அப்போது ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து மணல் குவாரிகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கையில் எடுத்துச் சென்றுள்ளனர். ஆஜரான மாவட்ட ஆட்சியர்களிடம் தொடர் விசாரணையானது ஆவணங்கள் அடிப்படையில் நடைபெற்றறது.

அடுத்தது என்ன?

இன்றைய விசாரணை மூலம் தெரியவந்த

- அந்தந்த மாவட்டங்களில் மணல் குவாரி தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

- மணல் குவாரிகளின் அனுமதிக்கப்பட்ட பரப்பளவு என்ன?

- தற்போது எத்தனை ஹெக்டர் பரப்பளவில் மணல் குவாரி விரிவடைந்துள்ளது?

- அனுமதிக்கப்பட்ட மணல் அளவு என்ன?

- மணல் குவாரி அதிபர்களின் மோசடிக்கு பின்னணியில் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருந்தனரா?

என்பது குறித்த முழுமையான தகவல்கள், முழுமையான விசாரணைக்கு பிறகே தெரிவிக்கப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ed
edtwitter

இந்நிலையில் பலமுறை சம்மன் அளித்தும் வராத ஐஏஎஸ் அதிகாரிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் சரியான நேரத்தில் ஆஜராகி இருக்கும் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்களிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பிறகு மணல் மோசடி விவகாரத்தில் எந்தெந்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிக்குவார்கள்? என்ற எதிர்பார்ப்பும் தமிழக மக்களிடம் மேலோங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com