[X] Close

லெபனான் வெடிவிபத்து: பெய்ரூட் நகரமே உடைந்து நொறுங்கியது- மீண்டவர்களின் நேரடி சாட்சியங்கள்

உலகம்

Beirut-explosion--Survivors-recount-the-moment-disaster-of-Lebanon

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 2013 ஆம் ஆண்டு சரக்குக் கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் துறைமுகக் கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்களின் கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அவர்களில் சிலரது கருத்துகளைப் பார்க்கலாம்.

image


Advertisement

தவ்பீக் நாஸர், வயது 32, ஐடி ஊழியர்
நானும் என் தந்தையும் வீட்டில் ஷோபாவில் உட்கார்ந்திருந்தோம். வீடே சத்தமாக இருந்தது. சில விநாடிகளில் நாங்கள் தூக்கி வீசப்பட்டிருந்தோம். ஜன்னல்கள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தன. ஸ்லோ மோஷனில் வைன் பாட்டில்கள் உடைந்து சிதறின. அலமாரிகள் சுக்குநூறாக பறந்தன. நாங்கள் பக்கத்து வீட்டில் இருந்தோம். ஒரு மூதாட்டி இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். நாங்கள் அவரை மீட்டோம். எங்கள் வீடு பழைய கட்டடம். பின்னர் என் குடும்பத்தினரை அடையாளம் கண்டு மெல்ல சுத்தம் செய்யத் தொடங்கினேன்.

image

மரியம் நெவ்ன், வயது 22, தொண்டு நிறுவன ஊழியர்
என் நண்பருடன் பெய்ரூட் ரெளச்சே மாவட்டத்தில் உள்ள ஒரு கஃபேயில் இருந்தேன். அதன் தரைத்தளம் அதிர்ந்தது. பின்னர் மிகப்பெரிய பலத்த காற்றுடன் கூடிய சத்தம் கேட்டது. அது எங்கள் காதுகளை அடைத்தது. ஏதோ போர் வரப்போகிறது என்று நினைத்தேன். நான் கடலுக்கு மிக அருகில் இருந்தேன். தரையே என்னை விட்டு நழுவுவதுபோல இருந்தது. எல்லோரும் கஃபேயைவிட்ட ஓடிக்கொண்டிருந்தனர். நாங்கள் வீட்டுக்குச் செல்வதற்காக காரை நோக்கி ஓடினோம். சாலை முழுவதும் வாகனங்கள். பெய்ரூட்டே உடைந்திருந்தது. கடவுள்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

image

பஹத் ஹாசன், வயது 21, பல் மருத்துவ மாணவர்
அப்போது நான் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். நாலா பக்கமிருந்தும் மிகப்பெரும் சத்தம் கேட்டது. நாங்கள் அதிக அதிர்வுகளை உணர்ந்தோம். பயங்கரமான சத்தத்துடன் கூக்குரல்கள் கேட்டன. கண்ணாடிகள், சுவர்கள், டிவி எல்லாமும் உடைந்திருந்தன. நான் தரையில் அடித்து தள்ளப்பட்டிருந்தேன். பிறகு பால்கனி பக்கம் ஓடிப்போய் வெளியே பார்த்தேன். வானத்தில் பெரிய கரும்புகை தெரிந்தது. என் பெற்றோர்கள் தெருவுக்கு ஓடிப்போய் பார்த்தார்கள். நான் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுத்து உதவினேன்.

image

ஹசன் ஹோம்சி, வயது 55, உணவுக்கடை நடத்துபவர்
என் சகோதரி வீட்டில் காஃபி குடித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஏதோ வெடிப்பது போன்ற சத்தம். கண்ணாடிகள் உடைந்து சில்லுகளாக பறந்தன. உடனே பலத்த காயங்களுடன் செத்து விழுந்தவர்களைப் பார்த்தேன். நான் உடனே காயமடைந்தவர்களுக்கு உதவி செய்தேன். இன்னும் அவர்களின் அந்த ரத்த வாடை அடித்துக்கொண்டிருக்கிறது. எங்கள் ஏழை மக்களை நினைத்து வருத்தமாக இருக்கிறது.

image

மிர்ரா பெர்ரி, வயது 23, அழகுப்பொருள் விற்பவர்
பெய்ரூட் நகரின் ஒரு வீதியில் நான் நடந்துகொண்டிருந்தேன். அருகில் பிஸ்ஸா உணவகம் இருந்தது. அந்த கட்டடம் அப்படியே நொறுங்கி விழுந்தது. ஏதோ தீ விபத்து அல்லது குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். மக்கள் இஸ்ரேல் என்று கத்தியபடி தெருவில் ஓடினார்கள். என்னை நண்பர் காப்பாற்றினார். எனக்கு எதுவும் நடக்கவில்லை.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close