Published : 19,Jan 2017 03:25 AM
பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டுக்கான போராட்டக்களத்தில் உள்ள இளைஞர்களின் ஒட்டுமொத்த பார்வையும் முதலமைச்சரின் டெல்லி பயணம் மீதுதான் தற்போது உள்ளது.
ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் சில நூறு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமே தொடங்கிய போராட்டமானது பெரிய புரட்சியாக தற்போது உருமாறியுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் மெரினாவை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் மெரினாவில் குவிந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் போராட்டம் தொடர்கிறது.
இதனையடுத்து போராட்டம் நடத்துபவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களுடன் தனது இல்லத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சரியான முடிவு கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தீவிரமடையும் என்று அவர்கள் தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை இன்று காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழர்களின் உணர்வுபூர்வமான போராட்டம் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைப்பார் எனத் தெரிகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வையும் முதலமைச்சரின் டெல்லி பயணம் மீது தான் உள்ளது. பீட்டாவை தடை செய்ய வேண்டும், அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த போராட்டக்காரர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.