விளையாட்டை விட இந்தத் தருணத்தில் குடும்பம்தான் முக்கியமானது என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது. மேலும் இனி சர்வதேச போட்டிகள் கூட நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமல் போனது குறித்து சுரேஷ் ரெய்னா, தனது கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் இது குறித்துப் பேசும் போது தனது குடும்பமே முக்கியம் என்றும் அது அனைவருக்கும்தான் என்றும் கூறியுள்ளார். மேலும் சுரேஷ் ரெய்னா, “எல்லோரும் இப்போது விவேகமானவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் நீங்கள் வைரஸ் தொற்றுள்ள எந்த இடத்திற்கும் செல்லக்கூடாது. நிஜமாகவே உங்கள் முடிவுகளில் நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நீங்கள் அவசியமானதை, அவசரமானதை மட்டுமே செய்யுங்கள். விவேகமானவராக இருப்பது, ஒருவருக்கொருவர் உதவும். மேலும் ஒற்றுமையாக இருப்பது அனைவரின் பொறுப்பாகும். நீங்கள் எவ்வளவு அதிகமாக வீட்டில் தங்க முடியுமோ அவ்வளவும் நல்லது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் நிறுத்தப்படுவது குறித்து எங்களுக்கு அறிவிக்கப்பட்டபோது, எடுக்க வேண்டிய எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். கொரோனா உலகளாவிய அச்சுறுத்தலாகும். ஐ.பி.எல் நடப்பது நல்லது. ஆனால் உங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. உங்களுக்கு குடும்பம், நண்பர்கள் எனப் பலர் உள்ளனர். நீங்கள் உண்மையிலேயே சென்று உங்கள் அன்புக்குரியவர்களை கவனிக்க வேண்டும். எனது விளையாட்டை விட எனது குடும்பம் முக்கியமானது. இது அனைவருக்கும் ஒரே மாதிரியானதுதான்” என்று கூறியுள்ளார்.