Published : 16,Dec 2019 12:54 PM
“குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வன்முறைகள் வேதனையளிக்கிறது” - பிரதமர் மோடி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைகள் பெரும் வேதனையை தருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த மதத்தவரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும், எனவே இதுபற்றி இந்தியர்கள் எவரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் பிரதமர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளில் நசுக்கப்படும் சிறுபான்மையின மக்களை காக்கவே இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவை தவிர வேறு எங்கும் போக முடியாதவர்களுக்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள், கருத்து மோதல்கள்தான் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தொந்தரவு செய்வதும் நமது பண்பாடு அல்ல என்றும் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான வன்முறை வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து பாடுபட வேண்டியுள்ளதாகவும் இந்நேரத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக மக்களை பிளவுபடுத்துவர்களின் செயல்களை அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார்.