Published : 23,May 2017 01:13 PM

கல்விச் சான்றிதழ் குளறுபடி: ஸ்மிர்தி இரானிக்கு மீண்டும் நெருக்கடி

Smriti-Irani-Fake-Degree-issue

மத்திய ஜவுளித் துறை அமைச்சரான ஸ்மிர்தி இரானி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, தனது கல்விச் சான்றிதழ் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அளித்த 3 பிரமாண பத்திரங்களில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்திருப்பதாக அமெர்கான் என்ற எழுத்தாளர் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மனு தாக்கல் செய்த போது ஸ்மிர்தி இரானி பி.ஏ. பட்டப்படிப்பை, தான் டெல்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் முடித்ததாக கூறியிருந்தார். 2011 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்காக போட்டியிட்டபோது, டெல்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் பி.காம். படித்ததாக குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு அமேதி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தபோது, தான் டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி கல்வி முறையில் பி.காம். படித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று பிரமாண பத்திரத்திலும் 3 விதமாக கூறியிருப்பதன் மூலம் தனது படிப்பு பற்றி அவர் தவறான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்துமே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125ஏ-ன் படி தண்டனைக்குரியது குற்றமாகும். ஆனால், அமெர்கான் தாக்கல் செய்த ஸ்மிர்தி இரானிக்கு எதிரான மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்போது தேர்தல் ஆணையத்தில் போலி கல்வி சான்றிதழ் தாக்கல் செய்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி மீது மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலி சான்றிதழுக்கு எதிரான மனுவை ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வந்த விசாரணை நீதிமன்றத்தில் இருந்து ஆவணங்களை தாக்குதல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மனு மீதான விசாரணை வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டப்படி தவறான சான்றிதழ்களை தாக்கல் செய்தால் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்