'சிறந்த அணிதான்; ஆனால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' - தோல்விக்கு பின் மனம்தளராமல் பேசிய சாம் கரண்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது.
சாம் கரண்
சாம் கரண்pt web

இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்று பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர், தங்கள் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை குவித்தனர். இதில், 47 பந்துகளில் 92 ரன்களை குவித்து, விராட் கோலி தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பின், 242 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 17 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களை குவித்தது. இதில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ஏற்கனவே, டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஆயிரம் ரன்களை விராட் கோலி குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 12 போட்டிகளில் 5ல் வென்று 10 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தில் உள்ளது. நேற்றைய தோல்வியின் மூலம் பஞ்சாப் அணிக்கான ப்ளே ஆஃப் கனவில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது பெங்களூரு அணி. தொடரில் இருந்து வெளியேறியுள்ள பஞ்சாப் அணி, 12 போட்டிகளில் விளையாடி 4ல் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண், “தொடரில் இருந்து வெளியேறி இருப்பது விரக்தியாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது. தொடர் முழுவதும் நேர்மறையான அறிகுறிகள் தென்பட்டும், இறுதிவரை செல்வதற்கான போதுமானதாக இல்லை. எஞ்சிய போட்டிகளுக்கும் எங்களிடம் சிறந்த அணி உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். தொடர்ந்து கற்றுக்கொண்டு, மேலும் சிறந்து விளங்க வேண்டும். சிறந்த வீரர்களை வழிநடத்தியதில் உண்மையாகவே மகிழ்ச்சி அடைந்தேன்.

சில சிறந்த போட்டிகளை விளையாடியுள்ளோம். சில சாதனை ரன் சேஸ்களும் நிகழ்த்தியுள்ளோம். ரசிகர்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏற்ற இறக்கங்கள் சவாலானதாக இருக்கும், அதிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com