Published : 16,Jun 2018 04:11 PM
கோபத்தில் திட்டிய தந்தை - மர்மக் கிணற்றில் மாணவரின் விபரீத முடிவு

ஆம்பூர் அருகே நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த மகனை தந்தை கோபத்தில் திட்டியதால், மகன் தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் தீபக் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் வார இறுதி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார் தீபக். அவரது தந்தை தீபக்கை அவ்வப்போது பொறுப்பில்லாமல் இருப்பதாக திட்டிவந்தார் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள நண்பர்களுடன் விளையாடிவிட்டு தீபக் வீடு வந்துள்ளார். அவரைக் கண்டதும் சம்பத் வழக்கம்போல, திட்ட ஆரம்பித்துள்ளார்.
தந்தையின் கோபமான வார்த்தைகளால் மனமுடைந்த தீபக், விரக்தியில் அருகாமையில் இருந்த பாழடைந்த கிணற்றில் குதித்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் அதற்குள் தீபக் இறந்துவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீபக்கின் உடலை மீட்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். பின்னர் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீபக்கின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீபக்கின் தந்தை மற்றும் குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து கூறிய அப்பகுதி மக்கள், அந்தக் கிணறு மர்மம் நிறைந்ததாக இருப்பதாகவும், தொடர்ந்து அங்கு பலிகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். அத்துடன் அந்தக் கிணற்றை மூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.
(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.