Published : 14,Apr 2018 02:09 PM

தொடரும் தீக்குளிப்புகள்.. சிக்கித்தவிக்கும் தமிழகம்.. எங்கே தொடங்கியது இந்தக் கலாச்சாரம்? 

Self-immolation-and-political-martyrdom-in-Tamil-Nadu

தீக்குளிப்பது என்பது இந்தியாவில் ஆதிகால ஒரு சமய சடங்கு. கணவன் மறைந்த பிறகு மனைவி உடன் கட்டை ஏறுவது என்பது வட மாநிலங்களில் பொதுவாக ராஜஸ்தானில், ராஜபுத்திர வம்சத்தினரிடம் இருந்து வந்த மரபு. 1815க்கும் 1818க்கும் இடைப்பட்ட காலத்தில் வங்காளத்தில் மட்டும் 378 முதல் 839 வரை உடன்கட்டை ஏறிவர்களின் எண்ணிக்கை இருந்ததாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. அதற்கு எதிராக ராஜாராம் மோகன் ராய் பெரும் இயக்கத்தையே நடத்தினார். அதன் விளைவால் 1829 ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு இதனை சட்டத்திற்கு எதிரானது என அறிவித்தது.

பழங்காலத்து புராண திரைப்படங்களை பார்த்தவர்கள் தெரியும் ‘சதி’ சம்பந்தமாகவே சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும். குறிப்பிட்ட சமூகத்தினரின் வாழ்வியல் முறையாக இருந்த இந்த முறை நேரடியாக தீக்குளிப்பு இல்லை. ஆனால் சில நேரங்களில் கணவன் மறைவிற்கு பெண்களே தானே முன் வந்து தீக்குளித்ததாக பலர் எழுதியுள்ளனர். பெண்கள் தானாக தீக்குளிக்கவில்லை, அதற்கு பின்னால் ஒரு சமூக அழுத்தம் இருந்திருக்கிறது என பல வரலாற்று அறிஞர்கள் எழுதி இருக்கிறார்கள். ஆக, ஒரு செயல் தானே நடப்பது இல்லை. அதன் பின் ஒரு சமூக உளவியல் காரணிகள் இருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்தியாவில் இப்போது ‘சதி’இல்லை. முற்றாக அது ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் எச்சங்கள் வேறு வடிவில், வேறு காரணங்களுக்காக் இன்னும் எங்கோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு சமூக மரபாக வழக்கத்தில் இருந்த இந்த முறையை இப்போது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் தங்களின் குமுறுலை வெளிப்படுத்தும் ஒரு ஆயுதமாகவும் மாறியுள்ளது. 

வைகோவை தவறாக சித்தரித்து வெளியிடப்பட்ட மீம்ஸ் காரணமாக அவரது நெருங்கிய உறவினர் விருதுநகர் சரவணன் சுரேஷ் தீக்குளித்திருக்கிறார். அவரை நேரில் சென்று மருத்துவமனையில் பார்த்த வைகோ கதறிக் கதறி அழுக்கிற காட்சி வெளியாகியிருக்கிறது. வைகோவிற்கு இது முதன்முறை அல்ல; வரலாறு நெடுகிலும் அவர் பல தீக்குளிப்புகளை பார்த்தவர். அதனை எதிர்த்து அவர் ஒவ்வொரு முறையும் கருத்துக் கூறி வருகிறார். இப்போது கூட “தீக்குளிப்பது தீர்வல்ல; உயிரோடு இருந்து போராடுவோம்” என்று கூறுகிறார்.

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் தீக்குளிப்பு ஒன்று உலகை உலுக்கியது என்றால் அது அரியலூர் மாவட்டம் கீழப்பழுரைச் சேர்ந்த சின்னசாமி தீக்குளிப்புதான். இந்தி திணிப்பை எதிர்த்து 25.1. 1964 அன்று அவர் தீக்குளித்தார். அண்ணாவின் நூல் தலைப்பான ‘தீப்பரவட்டும்’ போல் இந்தச் சோகச் செய்தி இந்தியா முழுக்கப் பரவியது. அதையொட்டி மாணவர் கிளர்ச்சி மிகப் பெரிய அளவில் மூண்டது. இந்த மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றுக்கு இப்போதுதான் நாம் 2015இல் பொன்விழா கொண்டாடினோம். ‘மொழிப்பற்று எங்கே விழிப்புற்று எழுக’ என பாரதிதாசன் பாடிய பாடலுக்குப் பின்னால் தொக்கி நிற்கும் வரலாறுகள் இவை.

இதற்கு பிறகு தமிழக அரசியலை ஆட்டிப்படைத்தது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்ரவூஃப்பின் தீக்குளிப்பு. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டு மன உடைந்த ரவூஃப் தீக்குளித்து இறந்தார். 1995 ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தான் தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக நடந்த முதல் தீக்குளிப்பு. அதன் பிறகு நடந்த தீக்குளிப்பு பத்திரிகையாளர் கு. முத்துக்குமாருடையது. மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள சாஸ்திரி பவன் முன்பாக நின்று அவர் தன் உயிரை இலங்கைப் பிரச்னைக்காக இரையாக்கிக் கொண்டார்.

தமிழ்நாட்டில் மாபெரும் விவாதத்தை கிளப்பிய சம்பவம் இந்தச் சம்பவம். பல அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும் அளவுக்கு முத்துக்குமாரின் தற்கொலை இருந்தது. அவரது உடல் கொளத்தூரில் தகனத்திற்காக எடுத்து சென்றபோது திரண்டக் கூட்டம்  கொஞ்ச நஞ்சமல்ல; அந்த ஊர்வலம் 90 சதவீத இளைஞர்களால் சூழப்பட்டு இருந்தது.

மேலும் அரசியல் சார்பாக அஞ்சலி செலுத்த சென்ற தலைவர்கள் சிலரை வெளியேற சொல்லி வாதிடும் அளவுக்கு வலுசேர்த்திருந்தது, முத்துக்குமாரின் மரணம். இந்த மரணம் ஏற்படுத்திய உத்வேகத்தால் பல இயக்கங்கள் தமிழகத்தில் புதியதாக தோன்றின. அதன் பின் மலேசியாவில் 27 வயது இளைஞர் ராஜா இறந்தார். சுவிட்சர்லாந்தில் முருகதாசன் தீக்குளித்து இறந்தார். இந்தக் கால வரம்பில் மொத்தம் 17 பேர் தீக்குளித்தனர். அத்தனைக்கும் முத்துக்குமாரின் கடிதம் பின்புலமாக இருந்தது. 2013 இல் கூட மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்திருக்கிறார். 

இதற்கு அடுத்த நெஞ்சை பதற வைத்தவர் செங்கொடி. காஞ்சிபுரம் தாலுக்கா ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த செங்கொடி இறந்தது மூன்று பேர் விடுதலைக்காக. அதாவது ராஜூவ் கொலைக் குற்றவாளிகளாக சிறையிலுள்ள சாந்தன் பேரறிவாளன், முருகன் மூவரையும் விடுதலை செய்யக் கோரி அவர் தீக்குளித்தார். அப்போது அவருக்கு 21 வயது. 2011 ஆகஸ்ட் மாதம் நடந்த இந்தச் சம்பவத்தை பலரும் இன்று மறந்திருக்க வாய்ப்பில்லை.

அடுத்த தீக்குளிப்பு காவிரிக்காக. நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்த பேரணியில் கலந்து கொண்ட விக்னேஷ் குமார் பேரணி புதுப்பேட்டையை நெருங்கிய போது தீக்குளித்தார். அவர் இந்தச் சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முதல் நாளே தனது முகநூலில் ஒரு பதிவை போடுகிறார். அதை முன்கூட்டியே தெரிந்திருந்தால் எப்படியாவது தடுத்திருப்போம் என்றது அவரது கட்சி. காவிரிக்காக ஒரு இளைஞர் இறந்ததை பலரும் இன்று மறந்தே போய் இருக்கலாம். சில தினங்களுக்கு முன்பாகக் கூட ஈரோட்டின் சித்தோடு பகுதியைச் சேர்ந்த பொம்மை வியபாரி தர்மலிங்கம் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தன் உயிரை வாரிக் கொடுத்திருக்கிறார். 

காஞ்சிபுரம் பல்லவன் மேட்டை சேர்ந்த மூஸாவின் தீக்குளிப்பு விநோதமானது. அதிமுக ஆட்சியை சசிகலா கைப்பற்ற நினைப்பதாக கூறி அவர் தீக்குளித்தார். அவரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் இன்றைய துணை முதல்வர் ஒபிஎஸ். இப்படி அரசியல் களத்தில் மட்டுமே அரங்கேறி வந்த தீக்குளிப்பை கந்துவட்டி பக்கம் திருப்பியவர் நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து, சுப்புலட்சுமி தம்பதியர்.

நெல்லை மாவட்ட ஆட்சியல் அலுவலகம் முன்பாக குடும்பத்தோடு மண்ணெண்ணெய் ஊற்றி உடலை பற்றி வைத்துக் கொண்டு அலறிய காட்சியைக் கண்டு மனிதாபிமானம் உள்ள அத்தனை பேரும் கதறினர். அதில் பெரிய கொடுமை என்னவென்றால் அதில் இரண்டு சிறுவர்களும் தீயில் பற்றி எரிந்ததுதான். ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடனுக்காக இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் வரை வட்டிக் கட்டியும் கடன் தீர்ந்தபாடில்லை. ஆகவே கந்துவட்டிக் கொடுமை தாள முடியாமல்தான் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் கூறியதாக வெளியான செய்தி வெளிநாடு வரை போய் உலுக்கியது. இதைபோலவே அடுத்த சில நாட்களில் சிலர் இதே கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயன்றதும் நடந்தது. 

ஒவ்வொரு முறையும் தீக்குளிக்க முயலும் மக்களை காப்பற்றுவதையே வழக்கமாக கொண்டிருக்கும் காவல்துறையை சார்ந்தவர்கள் இருவர் கூட ‘சாதி வித்தியாசம் காட்டப்படுவதாக’க் கூறி டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். பொது மக்களின் போராட்ட வடிவமாக இருந்த தீக்குளிப்பு காவல்துறையினரின் கைக்கு மாறும் அளவுக்கு வலுவான பாதிப்பை இந்தத் தீக்குளிப்பு சம்பவங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன. இன்று கூட மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமைச்சர் உதயக்குமார் முன்பாக 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றிருக்கின்றனர். அவர்களின் உறவினர்கள் மீது 14க்கும் அதிகமான பொய் வழக்குகள் புனையப்பட்டிருப்பதாகவும் சிலரை என்கவுண்ட்டர் செய்ய காவல்துறை முயற்சிப்பதாககவும் கூறி இந்த முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

தன்னைத் தானே மாய்த்துக் கொள்வது குற்றமாக இருந்த நிலையில், அதனை மாற்றி உரிய மனவள ஆலோசனைகள் தரும் வகையில் சட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் தங்களின் பிரச்னைகளை உயிரோடு இருக்கும் வரை தீர்க்க முடியாது என நினைக்கும் போதே அந்த முடிவிற்கு மக்கள் வருகின்றனர். அந்த நிலைக்கு மக்கள் போகாமல் சட்டப் பாதுகாப்பை அரசு அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் தண்டனைக்கு தருகின்ற முக்கியத்துவம் சட்டம் பாதுகாப்பு சம்பந்தமான நடைமுறைகளில் காட்டுவதில்லை. சட்டம் உடனடியாக செய்ய வேண்டியது அதைதான். எல்லா வழக்குகளையும் நீதிமன்றமே தாமாக முன் வந்து தீர்த்து வைக்க முடியாது.  ஆகவே தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்களின் பொறுப்பை உணர வேண்டும். அதையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்