Published : 19,Jan 2018 04:32 AM
திறந்தவெளியில் ‘போஸ்ட் மாடம்’: மருத்துவர் பணியிட மாற்றம்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திறந்தவெளியில் பிரேத பரிசோதனை செய்த புகார் தொடர்பாக மருத்துவர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநில வாலிபர் ஒருவர் 2 நாட்களுக்கு முன்பு இறந்து கிடந்தார். அவரது உடல் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில் துப்புரவுப் பணியாளர்கள் திறந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவரின் உடலை திறந்தவெளியில் வைத்து பிரேத பரிசோதனை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் இன்பசேகரன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், திறந்தவெளியில் பிரேத பரிசோதனை செய்த புகார் தொடர்பாக திருவள்ளூர் அரசு மருத்துவ மனையின் மருத்துவர் விஷ்வ பிரியா அரக்கோணம் அரசு மருத்து மனைக்கு மாற்றப்பட்டுள்ளார். துப்புரவு பணியாளர் அப்பாவு, திருத்தணிக்கும், மருந்தாளுநர் ருக்மாங்கதன் ஆவடி அரசு மருத்துவ மனைக்கும் பணி மாற்றம் செய்து மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.