Published : 30,Oct 2017 03:09 PM
2.ஓ இசை விழாவுக்கு அழைத்தார்கள்.. நான் போகவில்லை: பார்த்திபன் பஞ்ச்!

2.ஓ இசை விழாவுக்கு அழைத்தார்கள் நான் போகவில்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
‘6 அத்தியாயம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ.வெங்கடேஷ், தாமிரா, ஜாக்குவார் தங்கம், தனஞ்செயன், தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர். ‘6 அத்தியாயம்’ படத்தின் இசைத்தகட்டை இந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் அவர்களின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர், இயக்குநர் பார்த்திபன், “மழை வணக்கம். மத்திய அரசு செய்ய வேண்டியதையும் சேர்த்து விவசாயிகளுக்கு செய்யும் மழைக்கு என் நன்றிகள். 2.ஓ ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன். இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை. 6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை. இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்த கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போராளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள் அப்படி ஒரு படமாக அமையும்” என்றார்.