[X] Close

பேனர் தடையை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு: அரசு வழங்கறிஞரிடம் நீதிபதிகள் காட்டம் 

Appeal-to-challenge-banner-ban--Judges-are-angry-reply

பேனர் தடையையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதில் தமிழக அரசு காட்டும் அக்கறையை திருச்சியில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிட்டபோது காட்டியிருக்கலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

விளம்பர பேனர்களில் உயிருடன் இருப்பவர்களின் படங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த 23ஆம் தேதி நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில் வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், பேனர்களில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பது, விளம்பர படுத்துவதை சிதைக்கும் செயல் என்று கூறினார். மேலும் இறந்தவர்களின் புகைப்படங்களை தேட முடியாது என்றும், உயிருடன் இருப்பவர்கள் இறக்கும் வரை காத்திருக்க முடியாது என்றும் வாதாடினார்.இதைக் கேட்ட நீதிபதிகள் தற்போது மேல்முறையீடு செய்வதில் தமிழக அரசு காட்டும் அக்கறையை, திருச்சியில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிட்ட போது காட்டியிருக்கலாமே என்று பதில் கேள்வி எழுப்பினர். அத்துடன் பேனர்களை கண்காணிக்க போதிய பணியாளர்கள் இல்லை என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், புதிதாக பணியாளர்களை நியமிக்கப்படவில்லை என்றாலும் காலி இடங்களை ஏன் நிரப்பவில்லை? என்று கேட்டனர்..

அதேபோல் சுற்றி நடப்பதை கவனிக்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு உள்ளது என்றும் அரசு விரும்பினால் தாங்கள் கண்களை மூடிக்கொள்வதாகவும் நீதிபதிகள் காட்டமாக கூறினர். திருச்சியில் பேனர் அகற்றப்பட்டது குறித்து வரும் திங்கள்கிழமை தமிழக அரசு  அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதனுடன் சேர்த்து இந்த வழக்கை விசாரிக்க இருப்பதாகவும், எனவே பேனர் குறித்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close