Published : 25,Jan 2023 06:58 PM
‘பாபா’ வரிசையில்.. 1000 ஸ்க்ரீன்களில் மீண்டும் ரீ ரிலீஸாகும் கமலின் ‘ஆளவந்தான்’!

கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் மீண்டும் திரையரங்கில் புதிய தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் திரைக்கதை எழுதி, இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார். தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியிருந்த இந்தப் படம், கடந்த 2001-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. கமலின் ‘நம்மவர்’, ‘குருதிப்புனல்’ உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்த மகேஷ் மகாதேவன் பின்னணி இசையமைத்திருந்தார். பாடகர் ஷங்கர் மகாதேவனின் ட்ரியோ குழுவான Shankar–Ehsaan–Loy பாடல்களை அமைத்திருந்தது.
இந்தப் படத்தில் ரவீணா தாண்டன், மனீஷா கொய்ரலா, சரத் பாபு உள்பட பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசனின் இரட்டை கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தாலும், வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றிபெறவில்லை. இந்நிலையில், புதிய தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் இந்தப் படம் உலகமெங்கும் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விரைவில்
— Kalaippuli S Thanu (@theVcreations) January 25, 2023
திரையரங்கில்
உங்கள்
உள்ளங்களை
ஆள வருகிறான்! #Aalavandhan@Suresh_Krissnapic.twitter.com/xj4dWqc5sF
ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பாபா’ திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் வெளியாக உள்ளது. ‘பாபா’ மற்றும் ‘ஆளவந்தான்’ ஆகிய இரு திரைப்படங்களையுமே சுரேஷ் கிருஷ்ணா தான் இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களையுமே அந்தந்தப் படத்தின் நடிகர்களே திரைக்கதை, கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.