Published : 03,Nov 2022 07:55 PM

மீண்டும் குறுக்கிட்ட மழை: தென்னாப்ரிக்காவை சுருட்டிய பாகிஸ்தான்- அரையிறுதி வாய்ப்பிருக்கா?

T20-World-Cup-How-can-Pakistan-team-qualify-for-semi-final-after-win-against-South-Africa-Team

பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு இருக்குமா? என்று பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவில் உள்ள தலா 6 அணிகளுக்கும் மீதம் ஒரு போட்டிகளே எஞ்சியுள்ளன. இதனால் நாளை முதல் நடக்கும் போட்டிகள் அரையிறுதி வாய்ப்பை அணிகளுக்கு உறுதி செய்யும். இந்த ரேஸிலிருந்து ஏற்கனவே நெதர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் வெளியேறியுள்ளன. இந்நிலையில், குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் இன்று மோதின.

மீண்டும் சொதப்பிய ரிஸ்வான், பாபர் அசாம்!

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே 4 ரன்கள் எடுத்தநிலையில் முகமது ரிஸ்வான் அவுட்டாக, அடுத்ததாக களமிறங்கிய முகமது ஹாரிஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 28 ரன்கள் எடுத்திருந்தபோது எல்டபிள்யூ முறையில் தனது விக்கெட்டை இழந்தார்.

image

43 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த பாகிஸ்தான்!

அதன்பிறகு கேப்டன் பாபர் அசாம் 6 ரன்களிலும், ஷான் மசூத் 2 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாக 43 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான் அணி. இதனால், 120 ரன்களை எட்டுமா என்ற நிலை உருவானது. ஆனால், அதன்பின்னர் நடந்தது வேறு கதை. நான்கு விக்கெட்டுகள் இழந்த பிறகு களமிறங்கிய அகமது (51), நவாஸ் (28), சதாப் கான் (52) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

சீட்டுகட்டு போல் சரிந்த தென்னாப்ரிக்க பேட்ஸ்மேன்கள்!

இதனைத் தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி, 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணியை விட தென் ஆப்ரிக்கா அணி 15 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால் இந்தப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால்கூட பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற நிலை காணப்பட்டது.

மழைக்கு பின்னர் மீண்டும் தொடங்கிய போட்டி!

சிறிது நேரத்தில் மழை நின்றதால் மீண்டும் போட்டி தொடங்கியது. போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென்னாப்ரிக்க அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்ரிக்கா அணி 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்ரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

image

புள்ளிப்பட்டியலில் என்ன மாற்றம்?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில், நெதர்லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரானப் போட்டியில் வெற்றிபெற்ற தென் ஆப்ரிக்கா அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. வங்சதேசத்துக்கு எதிரான மற்றொரு போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் அந்த அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வந்தது. இருப்பினும் இந்திய அணி நேற்றையப் போட்டியில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு சென்றது. தென்னாப்ரிக்கா இரண்டாம் இடத்திற்கு வந்தது.

இந்தத் தொடரில் தென் ஆப்ரிக்கா அணி தனது வலுவான ஆட்ட நிலையை காட்டியதால், இன்று பாகிஸ்தானுடனான போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் போட்டியில் தோல்வியடைந்து ரன் ரேட்டும் +1.441 ஆக குறைந்து புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

3வது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்!

அதேநேரத்தில் கடந்த 3 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற பாகிஸ்தான் அணி, 2 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்தது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் குரூப் 2 பிரிவில் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு பாகிஸ்தான் அணி முன்னேறியுள்ளது. மேலும் +1.117 நெட் ரன் ரேட்டுகளுடன் அரையிறுதி வாய்ப்பிலும் நீடிக்கிறது.

image

பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பிருக்கா?

அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், பாகிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும் என்றிருந்தநிலையில், இன்றையப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அடுத்து வங்கதேசத்திற்கு எதிரானப் போட்டியிலும் நல்ல நெட் ரன் ரேட்டுடன் வெல்ல வேண்டும். அதேசமயத்தில் நெதர்லாந்து அணியுடனான போட்டியில் தென் ஆப்ரிக்கா தோற்றுவிட்டாலும் சரி, போட்டி மழையில் ரத்தானாலும் சரி, பாகிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை தென்னாப்ரிக்கா நெதர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் வெற்றிபெற்று விட்டால், இந்திய அணி, ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் அதிக வித்தியாசத்தில் தோற்றால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்திய அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரானப் போட்டியை தவிர அனைத்திலும் வெற்றிபெற்று முதலிடத்தில் உள்ளது.

நேற்றையப் போட்டியிலும் குறுக்கிட்ட மழை!

இன்று நடந்ததுபோன்றே நேற்றும் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் மழை குறுக்கிட்டது. எனினும் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி ஜெயித்தது. இதனால் இந்திய அணிக்கு மட்டும் தற்போது குரூப் 2 பிரில் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்