Published : 22,Jul 2022 10:25 AM
கொலை செய்து தண்டவாளம் அருகே வீசப்பட்ட பெண் - விசாரணையில் வெளியான பகீர் தகவல்

காடையாம்பட்டி அருகே தண்டவாள பகுதியில், பெண் கொலை செய்து வீசப்பட்டிருந்த வழக்கில் தொடர்புடைய கடத்தூர் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள ராமமூர்த்தி நகர் வழியாக செல்லும், ரயில் தண்டவாள பகுதியில் பெண் பிணமாக கிடந்தார். இதையடுத்து தீவட்டிபட்டி போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்த பெண், தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி மலர் (56) என்பது தெரியவந்தது. கணவர் இறந்து விட்ட நிலையில், தனியாக வசித்து வந்துள்ளார். இவர், அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில், கடத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், மலரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் இருந்ததை கேட்டபோது மலரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோவிந்தராஜின், தோழியான பிரபாவதியுடன் சேர்ந்து பிரபாவதியின் கணவர் தர்மதுரை என்பவரை அடித்துக் கொலை செய்து தண்டவாளத்தில் உடலை வீசிய அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. அதேபோல் மலரை, கோவிந்தராஜ், அவரது தோழி பிரபாவதி, தாய் விஜயகுமாரி, அக்கா புனிதா, நண்பர் அன்பானந்த் ஆகியோர் இணைந்து கொலை செய்து, தண்டவாள பகுதியில் வீசி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.