Published : 13,Jul 2022 12:41 PM

`பேசியது பொன்னையன்தான்; மிமிக்கிரில்லாம் செய்யல’- அதிரவைக்கும் அதிமுகவின் ஆடியோ அரசியல்!

The-shocking-audio-politics-of-AIADMK

நேற்றைய தினம் வெளியான ஆடியோவில் ’பொன்னையன்போல யாரும் மிமிக்ரி செய்யவில்லை, பேசியதே பொன்னையன்தான்’ என்றும், அது அவருடைய பேச்சே என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் கூறியுள்ளார்.

அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமானபொன்னையன், ஓ.பி.எஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடனிடம் பேசிய ஆடியோவொன்று நேற்று வெளியாகியிருந்தது. அதில் அவர், “தொண்டர்கள் இரட்டை இலை பக்கம் உள்ளனர். தலைவர்கள் பணத்தின் பக்கம் உள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி தன்னை காப்பாற்றிக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பக்கம் செல்கிறார். கே.பி.முனுசாமியும் ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். பணத்தை பாதுகாக்க தலைவர்கள் ஆடுகிறார்கள். தொண்டர்கள் தடுமாறுகிறோம். ஒரு மாதத்திற்கு 2 கோடி ரூபாய் வருமானம் வரும் அளவில் கே.பி.முனுசாமி குவாரியை துரைமுருகனிடம் இருந்து டெண்டர் பெற்று விட்டார். திமுகவை நாம் திட்டுவது இல்லை... அண்ணாமலைதான் திட்டி வருகிறார்.

image

குறைந்தபட்சம் 100 கோடி 200 கோடி அளவிற்கு பணம் இல்லாத மாவட்ட செயலாளர்களே இங்கு இல்லை. தலைமைக் கழகத்திற்கு மாவட்ட செயலாளர்கள் எதையும் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. தளவாய்சுந்தரம் தான் இந்தியாவிலேயே பெரிய புரோக்கர். சி.வி.சண்முகம் அப்பாவும், நானும் சட்டக் கல்லூரியில் வகுப்பு தோழர்கள். சி.வி.சண்முகம் பகலில் குடிக்கும் பழக்கம் உடையவர்.

சி.வி.சண்முகம் பொதுக்குழுவில் நாய் கத்துவதுபோல் கத்தினார். சி.வி.சண்முகம் கையில் 19 படையாச்சிய எம்எல்ஏகள், சாதி அடிப்படையில் எம்எல்ஏகள் உள்ளனர். கவுண்டர் 42 மாவட்டத்தில் உள்ளனர், அதில் எடப்பாடி பழனிசாமி கையில் வெறும் 9 பேர் தான். தங்கமணி, வேலுமணி மற்ற எம்எல்ஏகள் கையில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமியையும் ஓரங்கட்ட தயாராகி வருகின்றனர். பதவியை காப்பாற்றிக்கொண்டால் போதும் என எடப்பாடி பழனிசாமி முட்டாள்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார். யாரும் கட்சிக்கு விஸ்வாசமாக இல்லை” என்று பேசியிருந்தார்.

image

இந்த ஆடியோ பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதைத்தொடர்ந்து, புதிய தலைமுறைக்கு பொன்னையன் தொலைபேசியில் ஆடியோ பற்றி விளக்கமளித்தார். அந்த விளக்கத்தில் அவர், “அது மிமிக்ரி ஆடியோ, ஆடியோவில் பேசியிருப்பது நான் அல்ல. மிகவும் கீழ்த்தரமான முறையில் மிமிக்ரி செய்து ஆடியோவை வெளியிட்டுள்ளனர். நான் இருக்கும் உயரிய இடத்திற்கு, எந்த காண்டாமிருகத்திடமும் இப்படி பேச வேண்டிய அவசியமில்லை.

எதிரிகளைப் பற்றிக்கூட நான் இவ்வாறு பேசமாட்டேன். அப்படி இருக்கையில் என் நண்பர்களைப் பற்றி நான் இவ்வாறு பேசியிருப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறு. இப்படி மோசடி செய்தவர்களுக்கு என் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இந்த மிமிக்ரி ஆடியோவை வெளியிட்டுள்ளனர்” என்றார்.

இந்நிலையில் பொன்னையனின் அந்த விளக்கத்தை எதிர்த்து, ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் புதிய தலைமுறைக்கு இன்று மற்றொரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், “என்னிடம் செல்போனில் பொன்னையன் பேசியது உண்மைதான். மிமிக்ரி எல்லாம் செய்யவில்லை. பொன்னையனிடம் (09.7.22) அன்று இரவு 9:59 மணி முதல்17.28 நிமிடங்கள் பேசினேன். எனது கருத்துகள் ஓபிஎஸ்ஸிடம் சேரவேண்டும் என்ற எண்ணத்திலேயே பொன்னையன் என்னிடம் அவ்வாறு பேசினார். தான் பேசியதில் இருந்து அவர் இப்படி பின்வாங்க கூடாது” என்றுள்ளார்.

`ஆடியோவில் பேசியது நான் அல்ல’ என பொன்னையன் மறுத்திருந்த நிலையில் `ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் விளக்கமளித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் இந்த ஆடியோ அரசியல், அரசியல் வட்டாரங்களில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்