Published : 07,Apr 2022 06:29 PM

ஒருபுறம் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள்..மறுபுறம் ஆதரவாக ஆண்கள்.. களை கட்டிய ஆர்ப்பாட்டம்

Women-protests-against-opening-Tasmac-in-Salem

வேலூரில் மதுக்கடையை எதிர்த்து பெண்கள் சிலர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்தப் போராட்டத்தின் அருகிலேயே மது கடைக்கு ஆதரவு தெரிவித்து சில ஆண்களும் எதிர் போராட்டம் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் அந்த ஆண்களை விரட்டியடித்தனர். இதனால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள குறிஞ்சி நகர் பாலாறு செல்லும் சாலையில் தமிழக அரசு புதிதாக ஒரு மதுபானகடையை இரண்டு மாதங்களுக்கு முன்பு திறந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து அந்த மதுக்கடை மூடப்பட்டது. ஆனால் திடீரென நேற்று அந்த அரசு மதுபானகடையை மீண்டும் திறந்து செயல்பட துவங்கியுள்ளது.

image

இதனால் ஆத்திரமடைந்த மந்தைவெளி - குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த பொது மக்கள், “இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும். அரசு, தான் கொடுத்த வாக்குறுதியை மீறி மீண்டும் கடையை திறந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கதக்க செயல். இப்பகுதியில் குடியிருப்புகள், பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதால் இந்த மதுக்கடையால் மக்கள் பெரிதும் பாதிக்கபடுவார்கள். இதனை திறக்க கூடாது” என எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மதுகடைக்கு பூட்டு போடவும் முயன்றனர்.

தகவலறிந்து அங்கு சென்ற சத்துவாச்சாரி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். அதற்கு பிறகு கடை திறக்கப்பட்டு வழக்கமாக செயல்பட தொடங்கியது.

image

இதற்கிடையில் பெண்கள் மது கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதே சமயத்தில் மது குடிப்போர் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மது கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், காழ்புணர்ச்சி காரணமாக பெண்கள் போராடுவதாக பெண்கள் மீது குற்றச்சாட்டும் முன்வைத்தனர். “பெட்ரோல் விக்குற விலைக்கு தூர இருக்குற கடைக்கு போய் மது வாங்க முடியாது” என்று அவர்கள் கூறிவந்தனர்.

மேலும் “இங்கு மதுக்கடைக்கு போராட்டம் நடத்தும் யாரும் உள்ளூர் ஆட்களே கிடையாது. எங்களிடம் ஆதார் கார்டு உள்ளது. அவர்களை ஆதார் கார்டு காட்ட சொல்லுங்க. இது காழ்புணர்ச்சி காரணமாக செய்யப்படும் போராட்டம். ஏதோ நாங்கள் வந்து மதுவை வாங்கி சாப்பிட்டுவிட்டு அமைதியாக போகப்போகிறோம். இவர்கள் யார் போராட்டம் நடத்த? அதேபோல எங்களுக்கு 3 முதல் 4 கிலோ மீட்டர் தொலைவில் தான் மற்றோரு மது கடை உள்ளது.

.image

அங்கு போய் வாங்கினா இன்னைக்கு தேதிக்கு பெட்ரோல் அதிகமா செலவாகுது. அதுவும் இல்லாம போலீஸ் காரர்கள் நிறுத்தி கேஸ் போட்டு அபராதம் விதிக்கிறாங்க. சில சமயத்தில் விபத்து ஏற்படுது இதுக்கெல்லாம் யார் பொறுப்பு? எங்களால எந்த பிரச்சனையும் வராது. அதுக்கு நாங்க பொறுப்பு கடையை திறங்க” என்றனர்.

இதைத்தொடர்ந்து சத்துவாச்சாரி காவல்துறையினர் அவர்களை விரட்டினர். அப்போது காவல் துறைக்கும் அவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெண்களிடமும் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்தே போராட்டத்தை விடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

சமீபத்திய செய்தி: `செல்போனை தவறவிட்டால் இதைமட்டும் செய்யுங்க... போன் சீக்கிரம் கிடைச்சுடும்’- வேலூர் எஸ்.பி.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்