Published : 01,Mar 2022 12:28 PM

உக்ரைனை மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கும் இந்திய மாணவர்கள் - ஏன்? என்ன காரணம்?

Why-Indian-students-choose-Ukraine-for-Medical-studies

மருத்துவ படிப்புக்கு பெரும்பாலும் உக்ரைனையே இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகிக்கொண்டே உள்ளன. ஏன் என்பதுகுறித்து தெரிந்துகொள்வோம். 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அங்கு வாழும் மக்களை உயிருக்கு பயந்து தப்பித்து ஓட தூண்டியிருக்கிறது. பிப்ரவரி 24ஆம் தேதி ஆரம்பித்த ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து உக்ரைனும் வான்வெளி பயணத்திற்கு தடை விதித்ததால் அங்கு படிக்கச்சென்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பமுடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க ’ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனின் எல்லைகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேக்கியா போன்ற நாடுகள் வழியாகவும் மாணவர்களை மீட்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. எல்லைகளில் உதவிகள் காத்திருந்தாலும் அங்கு செல்வதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் மாணவர்களுக்கு குறைவாக இருப்பதால் இதுவரை 4,000 இந்திய மாணவர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 16,000 மாணவர்கள் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளின்றி பதுங்குக்குழிகளிலும், மெட்ரோக்கள் மற்றும் வெடிகுண்டு முகாம்களிலும் சிக்கித் தவித்துவருகின்றனர். இதனால் கேள்விகள் மற்றும் பயம் எழுந்தாலும், ஏன் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்விக்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர் என்பது குறித்து தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

image

உக்ரைனில் வெளிநாட்டு மாணவர்கள்

வெளிநாடுகளிலிருந்து உக்ரைனில் சென்று கல்வி பயிலும் மாணவர்களில் 24 சதவீதம்பேர் இந்தியர்கள்தான் என உக்ரைனின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. உக்ரைனில் வாழ்கிற கிட்டத்தட்ட 20,000 இந்தியர்களில் 18,000 பேர் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள்தான் என உக்ரைன் இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது. உக்ரைனில் பயிலும் 76,000 வெளிநாட்டு மாணவர்களில் இது அதிகப்படியான எண்ணிக்கை என்றும் தெரிவித்திருக்கிறது. மொராக்கோ, துர்க்மேனிஸ்தான், அஜர்பைஜான், நைஜீரியா, சீனா, துருக்கி, எகிப்து, இஸ்ரேல் மற்றும் உஸ்பேகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தும் கல்விக்காக மாணவர்கள் உக்ரைனில் தங்கியுள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறது.

image

கட்டணம் குறைவு

இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி படிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர். உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் கட்டணம் என்பது இந்திய தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிட குறைவாகவும், கல்வி வாய்ப்பு எளிதாகவும் கிடைப்பதால் பெரும்பாலானோர் உக்ரைனை தேர்ந்தெடுக்கின்றனர்.

உதாரணத்திற்கு இந்திய தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.60 லட்சத்திலிருந்து ரூ.1 கோடிவரை செலவாகும். ஆனால் உக்ரைனில் ஆறு பாடப்பிரிவுகளில் மருத்துவப்படிப்பை முடிக்க ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.22 லட்சம் வரை மட்டுமே செலவாகிறது. இது நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவக் கனவை சாத்தியமாக்குகிறது. மேலும் இந்தியாவில் குறைவான மருத்துவ கல்லூரிகளே உள்ளன. அதிலும் இடம்கிடைக்க நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவேண்டியிருக்கிறது. நீட்டில் தேர்ச்சிபெறாத மற்றும் குறைந்த மதிப்பெண்களில் தேர்ச்சிபெற்ற பலருக்கும் எம்பிபிஎஸ் என்பது தொலைதூரக் கனவாகவே மாறிப்போய்விடுகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 16,10,000 மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்தியாவில் 84,000 மருத்துவ இடங்களே உள்ளன. 

image

நுழைவுத் தேர்வு இல்லை

உக்ரைனில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு என்பது இல்லை. ஆனால் இந்திய மாணவர்கள் உக்ரைனிலுள்ள சிறந்த மருத்துவக்கல்லூரிகளில் சேர நீட் எழுதியிருப்பது அவசியம். தற்போது இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயில நீட் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதில் சலுகை என்னவென்றால் வெளிநாடுகளில் பயில நீட் தேர்ச்சி மட்டும் போதுமானது. டாப் மதிப்பெண் என்பது அவசியமில்லை. அதிகளவிலான இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகளை உருவாக்கும் ஐரோப்பிய நாடுகளில் உக்ரைன் நான்காவது இடத்திலுள்ளது. சிறந்த கட்டமைப்பு வசதிகளைக்கொண்ட 33 மருத்துவக்கல்லூரிகள் உக்ரைனில் உள்ளன. மேலும் இங்குள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களும் உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்றவை.

இந்தக் கல்லூரிகளில் பெறும் மருத்துவப்பட்டங்கள் ஐரோப்பிய மருத்துவ கவுன்சில், யு.கே பொது மருத்துவ கவுன்சில், பாகிஸ்தான் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கவுன்சில் போன்றவற்றால் அங்கீகரிப்பப்பட்டவை. ரஷ்யாவால் தாக்கப்பட்ட முதல் நகரமான கார்கிவ்-இல் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம்தான் உக்ரைனிலேயே பெரும்பாலானவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் கல்லூரியாகும். இது தலைநகர் கீவ்-லிருந்து கிட்டத்தட்ட 480 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மேலும் இங்குள்ள கல்லூரிகளில் பயிற்றுமொழி ஆங்கிலமாக இருப்பதால் புரிந்துகொள்ள எளிதாக இருப்பதோடு, வெளிநாட்டு மொழிகளை கற்கவேண்டிய அவசியம் இந்திய மாணவர்களுக்கு ஏற்படுவதில்லை.

image

அதேசமயம்...

இந்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ பயிற்சியை மேற்கொள்ளும் உரிமத்தைப் பெற தேசிய தேர்வு வாரியத்தின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வை (FMGE) எழுதியாக வேண்டும். ஆனால் ஆண்டுதோறும் இந்த தேர்வை எழுதும் 4000 மாணவர்களில் 700 பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் புத்தகம் மற்றும் பாடங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் செய்முறை பயிற்சி அனுபவம் என்பது அங்கு பயிலும் மாணவர்களுக்கு குறைவாகவே கிடைக்கிறது. ஆனால் இந்த காரணங்கள் உக்ரைனில் கல்வி பயில முயலும் இந்திய மாணவர்களுக்கு தடையாக இருப்பதில்லை.

Courtesy: The Federal

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்